காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் மன்னிப்பு கேட்ட ஒன்றிய அமைச்சர் ஜே. பி.நட்டா

புதுடில்லி, ஜூலை 31- நாடாளு மன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவை குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மணி நேரம் பேசினார். அவர் பிரதமர் மோடி குறித்து சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் பேசிமுடித்தவுடன் எழுந்த அவை முன்னவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டதாக ஆவேசமாக தெரிவித்தார்.

உணர்ச்சி வேகத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவரது வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரது பேச்சுக்கு கார்கேவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னிப்பு கேட்குமாறு கோரினர்.

பின்னர், ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார். அவர் கூறியதாவது:-

என் வார்த்தைகளை ஏற்கெனவே திரும்ப பெற்று விட்டேன். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பிரபலமான தலைவர். அது பா.ஜனதாவுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை. ஆனால் அந்த பெருமையை பற்றி கருதாமல், கார்கே பேசியது ஆட்சேபனைக்குரியது. இருப்பினும், எனது வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *