சென்னை, ஜூலை 31 – ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க ஒன்றிய அரசுக்குஉத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு சார்பில்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை (1.8.2025) விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்த்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: –
ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டம் என்பது பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான முழு வரம்பையும் உள்ளடக்கிய பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டம்.
இத்திட்டம் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்துதலையும், நிலையான, தரமான கல்வி வளர்ச்சியை யும் இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் தனது நிதி பங்களிப்பைஇந்த திட்டத்துக்காக வழங்குகின்றன.
தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் பி.எம். திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகையான ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய அரசை அணுகிய போது பி.எம். சிறீ திட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தினால் மட்டுமே இந்த நிதியை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மும்மொழி கொள்கை போன்ற காரணங்களுக்காக புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
மாநில சுயாட்சிக்கு எதிராக ஒன்றிய அரசு!
சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை பெறுவதற்கான தமிழ்நாட்டின் உரிமையை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துவது என்பது கூட்டாட்சி – சுயாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி அவமதிப்பதாகும்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கட்டாயப்படுத்துவது என்பது மாநில சுயாட்சி மற்றும் கட்டமைப்பையும், கல்வி தொடர்பான மாநில அரசின் சட்டங்களை தகர்க்கும் செயலாகும். தமிழ்நாட்டில் தற்போது இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக மும்மொழிகொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. குறிப்பாக ஹிந்தி, உருதுவை திணிக்கும் வகையில்இந்த மும்மொழிக் கொள்கை உள்ளது.எந்த மொழியையும் எவர் மீதும் கட்டாயப்படுத்தி திணிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
மற்ற மாநிலங்களைவிட…
தமிழ்நாடு ஏற்கெனவே கல்வியில் முன்னேறிய மாநிலமாக நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது. தமிழ் தாய்மொழி அல்லாத பிற மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமச்சீர் கல்வி திட்டம் மூலமாக தரமான சமமான கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நிதியுதவி என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது கொள்கையை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாட்டை கட்டாயப்படுத்த முடியாது. ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சூழலில் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழ்நட்டில் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரூ.2,152 கோடியை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்யும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடியாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை விசாரணைக்கு வருகிறது!
கடந்த நிதி ஆண்டுக்கான கல்வி நிதியான ரூ.2,151 கோடியை வட்டியோடு சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய, தமிழ்நாடு அரசின் வழக்கு நாளை (1.8.2025) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்த முதலமைச்சர்!
இந்த வழக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை பாரபட்சமின்றி விரைந்து வழங்கக்கோரி ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒன்றிய கல்வி அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்வி நிதியை தாமதமின்றி உடனே விடுவித்திடுமாறு வலியுறுத்தியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தியும் பதில் இல்லை!
சமீபத்திய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் அவர்கள் வழங்கிய பல கோரிக்கைகள் கொண்ட கடிதத்தை பிரதமர் மோடியிடம் நேரில் அளித்தார். அதில் கல்வி நிதியை உடனடியாக விடுவித்திடக் கோரியிருந்ததும் குறிப்பிட த்தக்கது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நாளை (1.8.2025) விசாரணைக்கு வரவிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.