23 ஆயிரம்  பெண்களைக் காணவில்லை!  சுதந்திரமாகச் சுற்றும் பாலியல் குற்றவாளிகள்!! ம.பி. பா.ஜ.க. அரசு ஒப்புதல்

1 Min Read

போபால், ஜூலை 31 மத்தியப் பிரதேச மாநிலத்தில் 23,000–க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகவும், பாலியல் குற்றங்களில் தொடர்புடைய 1,500–க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிவதையும்  பாஜக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

அதிர்ச்சிப் புள்ளி விவரங்கள்

‘2024 ஜனவரி 1 முதல் 2025 ஜூன் 30 வரை, மாவட்டம் வாரியாக காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை, கைது செய்யப்பட்ட மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து விரிவான விளக்கமும், கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன’ என்றும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்  கேள்வி எழுப்பி இருந்தார்.  இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த பாஜக முதலமைச்சர் மோகன் யாதவ், அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2025 ஜூன் 30 நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சுமார் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தம் 23,129 பேர் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ளனர்.  அதே போல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 292 நபர்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 283 நபர்கள் என மொத்தம் 575 பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 443 நபர்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 167 நபர்கள் என 610 குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அதாவது மத்தியப்பிரதேசம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் தொடர்பு டைய சுமார் 1,500–க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதை பாஜக அரசே அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜக அரசின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பின்மை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *