சத்தீஸ்கரில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்! பிரதமர் தலையிடக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசரக் கடிதம்

2 Min Read

திருவனந்தபுரம், ஜூலை 30– சத்தீஷ்காரில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்குக் கண்டனம் வலுக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நீதியை நிலை நிறுத்தக்கோரி அவருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

கன்னியாஸ்திரிகள் கைது

கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

சத்தீஷ்கார் மாநிலம் தூர்க் ரயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், அங்குள்ள நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது 18, 19 வயது மதிக்கத்தக்க 3 இளம்பெண்களை சுக்மான் மண்டாவி என்பவர் கன்னியாஸ்திரியிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினர் ஆள் கடத்தல், மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேராயர்கள் கூட்டமைப்பு கண்டனம்

ஆனால் 3 இளம் பெண்களையும், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சபையின் கீழ் செயல்படும் மருத்துவமனை மற்றும் அலுவலகத்தில் வேலைக்கு அழைத்து வர 2 கன்னியாஸ்திரிகளும் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் 3 இளம்பெண்களின் பெற்றோரிடமும் ஒப்புதலும் பெற்றதாக தெரிகிறது. எனவே இது தொடர்பாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது.

இதற்கிடையே கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்திந்திய பேராயர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மேலும் கேரளாவில் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்ட மும் நடந்தது.

முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம்

எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவசர கடிதமும் அனுப்பி உள்ளார்.

மேலும் கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டன பதிவை தெரிவித்துள்ளார். அதில் பொய் வழக்கில் கைதான கன்னியாஸ்திரிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *