“மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்திற்கும் ஏற்ற விதிகளைக் கொண்டதேயாகும்” என்று சொல்லப்படுமானால், அம்மாதிரி மக்களைப்பற்றிச் சுயமரியாதை இயக்கம் அதிகம் கவலைப்படுவது கிடையாது. அதற்குச் சுயமரியாதை இயக்கம் அவசியமானால், உதவியும் செய்யும். மற்றும் “மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்காக மதம் ஏற்பட்டது” என்றால், அதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டு விடும்.
ஏனெனில், அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம் அதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யும் மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்து, பொது முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் – அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேச வேண்டாம். “நம்முடைய மதம்” என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.
இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்த இந்து மதமல்லாமல் வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள் இத்தனை ஜாதிகளாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக, பார்ப்பான், பறையன் என்பதாகப் பிரிவு படுத்தப்பட்டிருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இதற்கு ஆதாரம் இந்து மத சாஸ்திரமும், வேதமும் தான் என்று பேசுகிறார்கள். ஆகவே, இந்த நிலையில் இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும், ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லிம் ஆகாத எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும், சுதந்திரமும், சமூக வாழ்விலும், பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்றவுடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய, மதம் மக்களுக்குச் செய்து வரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன என்பதை மத வெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு – குடித்தவனை மட்டும் கெடுக்கிறது. மதம், மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது.
100-க்கு 95 பேர்கள் தற்குறி. நமது நாடும் உலகத்திலேயே மிக்க
ஏழ்மை நாடு என்கின்றோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கென்று எவ்வளவு
செல்வங்களைப் பாழாக்குகின்றோம் என்று யோசிக்கின்றோமா?
சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமல்லாமல், மதம் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூல காரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும், நோகாமல் உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட ஒரு ஜாதியும், மதம் சிருஷ்டிக்கவில்லையா? உலகச் செல்வமும், போக போக்கியமும், சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும், சோம்பேறி வாழ்க்கையாருக்கும் சரீரப் பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும், வயிற்றுச் சோற்று அடிமையாகவும், கீழ் ஜாதியாராகவும், கீழ் மக்களாகவும் இருக்கவும், பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும், செல்வம் பெருக்கிக் கொள்ளவும், மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?
பகுத்தறிவற்ற பட்சி, மிருகம், பூச்சி, புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு, எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?
கழுதையில், நாயில், குரங்கில், எருமையில், ‘பறக் கழுதை, பற நாய், பறக் குரங்கு, பற எருமை’ என்றும், பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படியிருப்பதற்குக் காரணம், மதமல்லாமல் வேறு என்ன? இந்து மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும், சத்திய கீர்த்தி அரிச்சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும் பெண் ஜாதி விற்பனையும் பதினாயிரக் கணக்கான வருஷங்கள் ஆகியும் இன்னமும் ஒழியவில்லை என்றால், மதத்தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள்தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள்! செத்துப் பொசுக்கப்பட்டு அந்தச் சாம்பலைத் தண்ணீரில் கரைத்துவிடப்பட்ட மனிதனுக்குப் பசி தீரவும், சுகமடையவும், அரிசி, பருப்பு, காய், கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்துக்கு அனுப்பிக் கொடுப்பதென்றால் மனிதனுக்குச் சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? பெற்றோர்களை – இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காகப் பார்ப்பானுக்கு ஏன் அழ வேண்டும்? அவன் காலில் ஏன் விழ வேண்டும்? அவன் கால் கழுவின தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? மாட்டுச் சாணியும், மூத்திரமும் கலக்கி ஏன் குடிக்க வேண்டும்? இது மதக் கட்டளை, மதத் தத்துவம் என்றால், இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
கல்யாணம், கருமாதி, கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய, அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?
மற்ற மதக்காரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? நமக்குப் புத்தியும் இல்லை, வெட்கமும் இல்லை என்றால் கண்ணும் இல்லை, காதும் இல்லை என்று தானே அர்த்தம்? இதற்குப் பேர் மாமிச பிண்டம் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கள் மீது கோபித்து என்ன பிரயோஜனம்? எங்களை மத விரோதிகள் என்று வைவதில் என்ன பிரயோஜனம்? மனிதனுக்கு இன்று இருக்கும் கேவல நிலைக்குக் காரணம் மதமா? அரசாங்கமா? என்று சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன். இனி நமது கடவுள்கள் என்பதைப் பற்றியும் சிறிது பேசுகிறேன்.
இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும், அவைகளின் திருவிளையாடல்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டித் தனமேயாகும் என்றாலும், நமது எதிரிகள் நம் மீது வேறு எவ்விதக் குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய்க் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.
கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழைய கால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிடக் கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும், முகம்மதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும், மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும், குணமும், உருவமும் இணையும் இல்லாதது என்றும், மனிதரில் நன்மையான காரியம் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்குத் தீமையும் அளிக்கக் கூடியதென்றும் சொல்லிக் குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக் கொண்டு காரணம் சொல்லுகிறார்கள்.
ஆகையால், இன்றைய தினம் இந்துக்கள் என்பவர்களுடைய சிறப்பாகப் பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்வோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரம் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள்! மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்கை, பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுள்களாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் இரண்டு உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்குப் பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வளவோடு இல்லாமல் இக்கடவுள்களுக்குப் பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, தாசி, விபசாரத்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்குக் கல்யாணம், சாவு முதலியனவும் கூடக் கற்பிக்கப்படுகின்றன.
கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி, அதாவது கடவுள் விபசாரத்தனம் செய்வதாகவும், தாசி வீட்டுக்குப் போவதாகவும், மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும், உற்சவங்கள் செய்து காட்டி அவைகளுக்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும், ஊக்கமும், உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆவது நூற்றாண்டில் செய்யக் கூடியனவா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, அவைகள் மேற்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாகப் புராணங்களையும், இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு, அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கிறேன். இதைச் சொன்னால், எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும், நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கிறேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதைக் கடவுள் என்று அறிவுடையவன் ஒத்துக் கொள்வானா?
இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காகச் செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்ளுகிறதா? கடவுள்களைப் பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும், சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம், மூன்று தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே, அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலே பெண் ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்திவிட்டதா? என்று நாமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக்கல்யாணத்துக்குக் கொட்டுமுழக்கு, ஆடம்பரம் பணச் செலவு ஏன்? சாமி கல்யாண ஆராதனைச் சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களைப் பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில்
100-க்கு 95 பேர்கள் தற்குறி. நமது நாடும் உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கென்று எவ்வளவு செல்வங்களைப் பாழாக்குகின்றோம் என்று யோசிக்கின்றோமா?
ஒரு கடவுளுக்குத் தினம் எத்தனை தடவை பூஜை படையல்! ஒவ்வொரு பூஜை படையலுக்கும் எத்தனை படி அரிசி, பருப்பு சாமான்கள்! இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்குக் கல்வி இல்லை, தொழில் இல்லை; சாப்பாடு இல்லை என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால் யோக்கியன் எப்படிச் சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர் – ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷா வருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் செலவு, மெனக்கெட்டுச் செலவு, உடல்கேடு, ஒழுக்கக் கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்று கேட்கிறேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக்கூடிய பணம் மீதியாகாதா?
நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றித் தொழிற்சாலைகள், பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலையில்லாத் திண்டாட்டமும், தற்குறித் தன்மையும், அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரைநிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கிறேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாயிருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைப் பாழாக்கி இவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து கொள்ளுவதா என்று கேட்கிறேன்.
மற்றும், கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு பக்தியின் காரணம் காட்டிக் கொண்டு எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக் கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக் கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும், மொட்டை அடித்துக் கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும், சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும், கத்திகளையும் குத்திக் கொள்ளுவதும், அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆன காரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?
மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளைக் கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டிச் சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம் பத்து, லட்சம் கோடி பெறும்படியான ஆறு ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டுப் பொதுச் செல்வங்கள் அல்லவா? இவைகளைக் கல்லுகளுக்கு அழுதுவிட்டுச் சோம்பேறிச் சூழ்ச்சிக்காரன் பார்ப்பான் வயிற்றை நிரப்பி அவன் மக்களை அய்.ஏ.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜ், திவான்களாக ஆக்கி விட்டு இவைதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப் பட்ட கடவுள்களையும், கடவுள் தொண்டுகளையும், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்தப் பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.
இனி எப்பொழுதுதான் நமக்கு புத்தி வருவது? இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகம் என்கிறான். அவன் பேச்சையும், அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக் கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடுகிறார்கள். அப்படியானால், இந்தக் கடவுள்களை ஒப்புக் கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய்க் கூத்தாடுவதுதானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகமா? அப்படியானால், அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஏதோ, எங்களுக்குத் தோன்றியதை – நாங்கள் சரி என நம்புவதை, அதாவது நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும், கடவுள்களும், கொடிய வியாதியாய் பரவுகின்றனவென்றும், இவை ஒழிந்தலொழிய நாடும், மனித சமூக அறிவும், ஆற்றலும் முற்போக்கு அடையாது என்றும் கருதுவதால் உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். பொறுமையாய்க் கேட்டு, பிறகு உங்கள் அறிவுப்படி நடவுங்கள் என்று சொல்லுகிறோமே ஒழிய, பார்ப்பனர்கள் போல் நாங்கள் பேசுவதை எல்லாம் நம்புங்கள் எனக் கூறவில்லை. நம்பினால்தான் மோட்சம், இல்லாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.
(‘உண்மை’ 14.1.1971)