புதுடில்லி, ஜூலை 30 இந்தியா –- பாகிஸ்தான் சண்டை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறு கிறார். பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவாரா? என்று மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முன்தினம் (28.7.2025) மக்களவையில் மதியம் 1 மணிக்கு பகல்காம் தாக்குதல், ஆபரேசன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கியது. விவா தத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நேற்று (29.7.2025) அதிகாலை 1:30 மணி வரை முதல் நாள் விவாதம் நீண்டது. இந்நிலையில், நேற்று காலை இரண்டாவது நாள் விவாதம் தொடங் கியது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில்,”இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே. 1971இல், சிம்லா ஒப்பந்தத்தின் போது, காங்கிரஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி மறந்துவிட்டனர். அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரை எடுத்திருந் தால், இப்போது அங் குள்ள முகாம்களில் தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்திருக்காது” என வழக்கம் போல காங் கிரசையும், நேருவையும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடிக்கு சவால்
மக்களவை எதிர்க்கட் சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘பகல்காம் தாக்குதலின் போதும் ஆபரேசன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பும் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. அதாவது ஒன்றிய அரசின் பின்னால் எதிர்க்கட்சிகள் மலை போல நின்றன. ஒன்றிய அரசின் பின் னால் நிற்பது என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக கூடி முடிவு செய்தோம்.
1971இல் நடைபெற்ற போரையும், ஆபரேசன் சிந்தூரையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்பிட்டுப் பேசினார். 1971இல் வலுவான அரசியல் தலைமை இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வல்லரசு நாடுகளுக்கு அடிபணியாமல் இருந்தார். குறிப்பாக அவர் 1971 போரில் பாது காப்பு படையினருக்கு முழுச் சுதந்திரம் அளித் தார். ஆனால், தற்போது நிலைமை அப்படி அல்ல. பாதுகாப்பு படைக்குச் சுதந்திரம் வழங்கவில்லை. பாகிஸ்தான் ராணுவ தளங்களைத் தாக்க வேண் டாம் எனக் கூறியுள் ளார்கள். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பால் நாம் ராணுவ விமானங்களை இழந்தோம். இந்தியா – பாகிஸ் தான் போரை நிறுத்திய தாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 29 முறை கூறி விட்டார்.
இந்திரா காந்தியைப் போல் பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால், டிரம்ப் பொய் சொல்கிறார் என்று நாடாளுமன்றத்தில் சொல்லட்டும். துணிவு இருந்தால் இந்திய ராணுவத்துக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும்” என பிரதமர் மோடிக்கும், ஒன்றிய அமைச்சர்களுக் கும் அவர் சவால் விட்டார்.