புதுடில்லி, ஜூலை 30 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுபம் திவேதியின் மனைவி, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உயிரிழந்த 26 பேரின் பெயர்களைக் குறிப்பிடாதது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் 26 உயிர்த்தியாகிகளின் பெயர்களைக் குறிப்பிடாதது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ராகுல் காந்திக்கும், பிரியங்கா காந்திக்கும் நன்றி,” என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
உரிய மரியாதை அளிக்கவில்லை
பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற நிலையில், இந்த வீரரின் மனைவியின் கருத்து, ஆளும் பாஜகவுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை இது கிளப்பியுள்ளது.
முன்னதாக, மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்தனர். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது விளக்கவுரையில் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இச்சம்பவம், உயிரிழந்த வீரர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை குறித்தும், அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.