புதுடில்லி, ஜூலை 30, ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் மக்களவை உறுப்பினர் குற்றம்சாட்டினார். நேற்று (29.7.2025) மக்களவையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பகல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்த நிலையில், பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
பகல்காமில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாக்குதல் நடந்தும், அங்கு வீரர்கள் செல்லாதது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். துணிச்சலான இந்திய வீரர்களுக்குத் தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யார் பொறுப்பு?
பகல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை தெளிவாகக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார். மேலும், 2021க்குப்பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இதற்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினார்.
டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பைக் கண்காணிப்பதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். பகல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத் துறை தலைவர் பதவி விலகுவார்களா? என்றும் அவர் சவால் விடுத்தார். காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதிகள் உடனடியாக கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்றும், ஒன்றிய அரசு அல்ல என்றும் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி; நேரு, இந்திரா, சோனியா குறித்துப் பேசும் பாஜக அரசு, சண்டை நிறுத்தம் எப்படி வந்தது எனப் பேச மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
பாதுகாப்பு குறைபாடு
வெற்றியை மட்டுமே கணக்கில் கொள்ளும் பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்காதது ஏன் என்றும் அவர் வினவினார்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி குறித்துப் பேசும் ஒன்றிய அரசு, பாதுகாப்பு குறைபாடு குறித்துப் பேச மறுப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மக்கள் மற்றும் வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.