புதுடில்லி, ஜூலை.29- பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது என்று கூறப்படுவது தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல்
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் அங்கு வருவதை யொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள் ளது. அந்த பட்டியல்தான், இறுதி பட்டியலாக இருக்கும். என்று தகவல் வெளியாகி வரு கிறது.
வீடு வீடாகச் சென்று
இந்நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்கள் அளித்துள்ளனர். 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள், கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்ப்பித்துள்ளனர். 36 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை. 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன.
இது இறுதிப் பட்டியல் இல்லை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதுதான் இறுதி பட்டியல் என்ற மாயையை சிலர் உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால் அது இறுதியானது அல்ல.
பட்டியலில் தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்கள் ஆகியோர் குறித்து சுட்டிக்காட்டுவதற்காக ஆகஸ்டு 1-ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
அரசியல் கட்சிகள் அந்த ஒரு மாத காலத்தில், தங்களது முகவர்கள் மூலமாக கோரிக்கை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கச் சொல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.