சென்னை, ஜூலை 29- கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) வாங்க வேண்டும் என் றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
உரிமம் கட்டாயம்
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால்,அரசாணை வெளியிடப்பட்டு தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.இந்தசட்டத்தின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் அதற்குரிய கட்டணம் செலுத்தி இனி அதற்கு கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும்.
கட்டணம்
இந்த சட்டத்தின்படி தமிழ்நாடு அரசு நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகள் என 2 வகையாக பிரித்து உள்ளது. அதேபோல் தொழில்களை உற்பத்தி மற்றும் சேவைகள் என 2 பிரிவாக பிரித்து உள்ளது. அதற்கு விண்ணப்பபடிவம் கட்டணம் ரூ.500 ஆகும். மேலும் ரூ.5 லட்சம் முதலீட்டுக்குட்பட்ட தொழிலுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.3 ஆயிரம் வரை உரிமம் (லைசென்ஸ்) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை முதலீடு உள்ள தொழிலுக்கு குறைந்தபட்சம் ரூ.750 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் உரிமக் (லைசென்ஸ்) கட்டணம் வசூலிக்கப்படும். டீக்கடை, உணவகங்கள் விவசாயப் பொருட்கள், எண்ணெய் தயாரிப்புகள் உள்ளிட்ட 48 உற்பத்தி தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சலவைக் கடைகள்
அதேபோல தேநீர்க் கடை, பழைய பேப்பர்கள்- இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியிலிடப்பட்டு உள்ளன. இந்த தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்பா, அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியவை கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழில் செய்யும் இடங்களும் தமிழ்நாடு கட்டட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். கழிவு மேலாண்மை, தீ பாதுகாப்பு, சுகாதார வசதிகள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். தமிழில் எழுத்து பலகை வைக்க வேண்டும்.
வருமானம்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எல்லாம் தொழில் உரிமம் பெறுவது கட்டாயம். தற்போது கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கும் இது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உள்ளாட்சிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். அதேபோல் எத்தனை பேர் என்னென்ன தொழில்கள் செய்கிறார்கள் என்ற கணக்கும் அரசிடம் இருக்கும். எனவே கிராம பஞ்சாயத்துகளில் தொழில் செய்பவர்கள் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வேளை விதிகளுக்கு உட்படாமல் இருந்து உரிமம் வழங்கப்படாவிட்டால், வட்டார அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.