சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும்
என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலைநாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை. முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலண்டியராக இருந்தாராம். அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்தபோது எனக்கு வாலண்டியராக இவரை அமர்த்தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன். அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன். எனக்கு வாலண்டியராக இருந்தவர் சென்னை முதல் மந்திரியாக இருக்க, நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கூட ஆக முடியும். ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான் ஜாதியின் கொடுமை அடியோடு ஒழிய வேண்டும். நான் மற்றவர்களைப் போல் சும்மா பணக்காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால், இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல, கடவுளையே ஒழிக்க முற்படுவனாகிய எனக்கு இந்தப் பணக்காரன்களை ஒழிப்பதா பெரிய காரியம்?
மேலும், இப்போது கூறுகிறேன். மந்திரிகளைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை. சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால் தான் கொஞ்சம் அயர்வேன்.
பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல. வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால், பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்தி விட்டு பிறகு நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.
(17.02.1956ல் மாயூரம் மணல்மேட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு) ‘விடுதலை’, 05.03.1956
நம் கருத்து செல்வாக்குப் பெற்று விட்டது
இந்த ஜாதியை ஒழிக்க முடியாத சட்டசபை என்ன சட்டசடை? என்ன பார்லிமெண்ட்! நாடாளுமன்றம்) குன்றக்குடி அடிகளார் வந்தார்! “அய்யா நீங்களும் மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்று சொல்கிறீர்கள்: நானும் பொதுநலத்தொண்டன் என்றுபேர் வைத்துக் கொண்டிருக்கிறேன்; நீங்களும் என்னதான் மடாதிபதியாய் இருந்தாலும், நீங்களும் சூத்திரப் பட்டியலில் தானே இருக்கிறீர்கள்? வாருங்கள். ஜாதியை ஒழித்துப்போடலாம்” என்றேன். அவரும் ஒத்துக்கொண்டு என்னால் ஆனதைச் செய்கிறேன் என்று சொன்னார். இதில் என்ன தப்பு? ஊர் ஊராய் தீர்மானம் போடுகிறான். குன்றக்குடி அடிகள் ஜாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லக்கூடாதா? பார்ப்பான் திட்டவில்லை, நம் ஆள்தான் திட்டுகிறான்; ஜாதியைப்பற்றிப் பேசுவதை எவ்வளவு கேவலமாக நினைக்கிறார்கள்? சைவன் இடத்தில் இல்லையா ஜாதி? 100க்கு 90 பேர்பக்தன். நீயும் சூத்திரன்தானே!
மந்திரிகளைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை. சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால் தான் கொஞ்சம் அயர்வேன்.
அன்பே சிவம் என்கிறாய்! இப்பொழுது நீ வணங்கும் சிவன் அந்தச் சிவன் தானா? பார்ப்பான் சிவனை நீ எப்போது ஏமாந்து ஒத்துக்கொண்டாயோ அப்பொழுதே நீயும் சூத்திரன்தானே? உன் சிவனை நீ தொடக்கூடாதே: 63 நாயன்மார்கள் என்கிறான். படி என்றால் 123 எப்படியடா வந்தது என்றால் அதுவேறு சங்கதி. ”அட சிவனே! என்னை ஏண்டா சூத்திரனாக்கினே? சோம்பேறி முடிச்சு மாறிப் பார்ப்பானை ஏண்டா முதல் சாதியாக்கினே?” என்று கேட்க வேண்டாமா? சாமியைத் திட்டினால் என்ன தப்பு? பிரியத்தினால்தானே திட்டுகிறோம்? ஒவ்வொரு சாமிக்கும் பூணூல் மாட்டி வைத்திருக்கிறானே? அது பார்ப்பார சாமி! எந்தச் செட்டியார் அரிசி, பருப்பு கொடுக்கிறாரோ அந்தச் செட்டியாரே சாமி சாப்பிடுவதைப் பார்க்கக் கூடாது. இந்த சாமி இன்று இருக்கலாமா? போட்டு உடைக்கவேண்டாமா?பத்துஊரிலே உடைத்தால் ‘நான் எங்கேசொன்னேன்? எல்லாம் பார்ப்பான்தான் சொல்லிவச்சான், தயவு பண்ணி என்னை விட்டுவிடு” என்று சாமி சொல்லுமே! எத்தனை காலத்திற்குச் சூத்திரனாக இருப்பது? நம்மைத் தவிர யார் கவலைப் படுகிறார்கள்? இதைப்பற்றிப் பேசினால் வகுப்புவாதம். ‘தேவடியாள் மகன்’ என்பதற்கு வெட்கப்பட்டால் மந்திரி வேலை போய்விடும்.
துருக்கியிலே ஜாதி இல்லையே! அங்கு மதம் இல்லையா? கடவுள் இல்லையா? இங்கிலாந்தில் ஜாதி இல்லையே! அங்கு மதமும் கடவுளும் செத்தாபோய்விட்டன? தோழர்களே! இன்று நம் கருத்து செல்வாக்குப் பெற்றுவிட்டது. பெரும்பாலான மக்கள் ஆதரிக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டாமா? இந்த வருடம் ஜாதியை ஒழிப்பதும், வகுப்புவாரி நீதி பெறுவதும் நமது லட்சியமாக இருக்க வேண்டும்.”
(16.10.1957 அன்று காரைக்குடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு) விடுதலை, 21.10.1956
அஸ்திவாரமில்லாத கேடு
இந்த வரவேற்பில் “இந்துமதச் சீர்திருத்தம்’ என்று போட்டிருந்தீர்கள் இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை. வெள்ளைக்காரன் காலத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இருப்பதாகவே ஒத்துக்கொள்ளவில்லை. எலெக்ஷன் (தேர்தல்) தொகுதியைப் பற்றிப் பேசும்போது, கிறிஸ்தவர்களுக்குக் கிறிஸ்தவர் தொகுதி, முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தொகுதி என்று போட்டான். மற்றப்படி இந்து என்று சொல்லிக் கொள்கிறவர்களுடைய தொகுதிக்கு இந்துக்கள் தொகுதி என்று போடவில்லை. “முஸ்லிம் அல்லாதவர் தொகுதி என்றுதாள் போட்டு நாமினேஷன் ஃபாரமே (வேட்பாளர் படிவம்) அச்சுப் போட்டான். இந்து என்றால் எப்படி இந்து? ஆதாரம் என்ன? என்று கேட்டான். இன்று, இந்துமதம் என்பதற்கு என்னதான் ஆதாரம் இருக்கிறது? மற்ற மதங்களுக்கு ஆதாரம் இருக்கிறது: சரித்திர ஆதாரம் இருக்கிறது. முஸ்லிம்
என்றால் அம்மதத் தலைவர் மகம்மது இன்ன இடத்தில், இன்ன வருடத்தில் பிறந்தார்; இன்னின்னதைச் செய்தார் என்பதற்குச் சரித்திர ஆதாரம் காட்ட முடியும். அதேபோல 1956 வருடத்திற்கு முன்னால் ஏசு பிறந்தார்; இன்னதைச் செய்தார். இன்னதைச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் – சரித்திரம் இருக்கிறது. ஆனால் இந்துமதம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஏதோ “வல்லான் வகுத்ததே வழி” என்கிற தன்மையில்தான் இருக்கிறதே தவிர வேறில்லை. அப்படி ஆதிக்கத்தில் விழிப்போடிருந்து கொண்டுவந்து விட்டார்கள். இராமாயண காலத்திலிருந்து, பாரத காலத்திலிருந்து, பறையன் இருக்கிறான். சக்கிலி இருக்கிறான். பிராமணனும் இருக்கிறான். இவற்றுகெல்லாம் என்ன ஆதாரம்?
இப்போது பணக்காரன் என்றால் அவன் சட்டப்படி பணக்காரன், அரசமைப்புச் சட்டத்தில் ஒருவன் எங்கு வேண்டுமானாலும் போய், என்ன வேண்டுமானாலும் செய்து, எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று சட்ட உரிமை இருக்கிறது. சம்பாதிக்கிறான், நிலம் வாங்குகிறான். மற்றவை செய்கிறான். அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறான். அதற்காக அரசாங்கம் பாதுகாப்பளிக்கிறது;
அவனை ஏதாவது சொன்னால், செய்தால் அவனிடம் வரி வாங்குகிற அரசாங்கம் நம்மை விரட்டுகிறது. அப்படி அவன் சட்டப்படி பணக்காரன், பார்ப்பானுக்கு என்ன ஆதாரம்? முஸ்லிமுக்கு. கிறிஸ்தவனுக்கு இருப்பதுபோல் சரித்திர பூர்வமான ஆதாரம் என்ன இருக்கிறது? எவன் எந்தக் காலத்தில் இருந்தான் என்று சொல்ல முடியுமா?
மனு, பராசரர், நாரதர், யக்ஞவல்லியர்களெல்லாரும் சொன்னது புராணம், அந்தப் புராணம்தான் பார்ப்பானுக்கு ஜாதியைக் காப்பாற்ற ஆதாரம். என்னடா என்றால் மனுசொன்னான், இவன் சொன்னான் என்கிறான். இந்த மனு, பராசரர், நாரதர் இன்னும் மற்றவர் எல்லாரும் யார்? எந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள்? யாராவது சொல்லமுடியுமா? ஒரு நாரதனை எடுத்துக் கொண்டால். எந்தப் புராணத்தை எடுத்துக் கொண்டாலும் வருகிறான். 5 கோடி, 10 கோடி வருடம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எத்தனையோ சதுர்யுகங்கள்! இராமாயணத்தில் நாரதன் வருகிறான். இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படுவது திரேதாயுகத்தில்; 17 ஆயிரம் வருடத்துக்கு முன், அப்பொழுது நடந்ததென்றால் இப்பொழுதுள்ள 2000, 3000 வருடத்து சங்கதி அதில் வருகிறது. புத்தன் இறந்து 2000 வருஷம் ஆகிறது: இந்த சங்கதி ராமாயணத்தில் 4, 5 இடங்களில் புத்தனைப்பற்றி வருகிறது. எப்படி வந்தது என்றால் உனக்குத் தெரியாது: யுகத்துக்குயுகம் ஒரு புத்தன் இருந்தான் என்கிறான்.
அதுமட்டுமா? இராமாயணகாலமே 17 லட்சம் வருடம். அதில் இராவணன் மாத்திரம் 50 லட்சம் வருடம் அரசு புரிந்தததாகச் சொல்லுகிறான். உதாரணமாக ஒரு சேர்மன் நகரமன்றத் தலைவர்) என்றால் அவர் ஆட்சிக்காலம் 3 வருடம் ஒரு பீரியட்’ 3 வருடமாக இருக்கிற சேர்மன் பதவியில் திரு மங்களக்கவுண்டர் 46 வருஷம் ஆண்டாரென்றால் என்ன அர்த்தம்? ஒரு நாரதர் எத்தனை புராணத்தில் வருவது? எத்தனை கோடி வருடம் இருப்பது? நினைத்ததை எல்லாம் எழுதி இது நாரதன் சொள்ளது. மனு சொள்ளது. வெங்காயம் சொள்ளது என்று ஏமாத்தியிருக்கிறார்கள்
இப்படி அஸ்திவாரமில்லாத கேடு – இந்த ஜாதி முறைகள் அஸ்திவாரம் இல்லாதவைகளைச் சொல்லிப் பார்ப்பான் நம்மை – மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிற தொழிலைச் செய்து வருகின்றவர்களை இவன் தோட்டி, சக்கிலி, பறையன். சூத்தின் தேவடியாள் மகன். நான் பிராமணன் – உயர்ந்தவன் என்று கூறி வருகிறான்.
இதைப்பற்றிப் பேச என்னைத் தவிர வேறு ஆள்கிடையாது. மற்றவர்கள் ஆகையால்தான் இந்தத் தொண்டை என்னால் முடிந்தவரை செய்வதை இலட்சியமாகக் கொண்டிருக் கிறேன். அதை நீங்கள் பாராட்டியதற்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்”
8.11.1950 இல் பழனி நகர சபை வரவேற்பில் தந்தை பெரியார் சொற்பொழிவு
விடுதலை, 11-11-1956