புதுடில்லி, ஜூலை 28 இந்தியாவில் திருமணமான பெண்களின் கருவுறாமை பிரச்சினைக்கு அதிகரித்து வரும் ஆண்களின் உயிரணு குறைபாடே 50 சதவீதம் வரை காரணம் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கருவுறுதலில் பிரச்சினை ஏற்பட்ட 2.75 கோடி பேரில் ஆண்கள் கிட்டத்தட்ட சரிபாதி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் ஆண் மலட்டுத் தன்மை
சமீபத்தில் சோதனைக் குழாய் குழந்தை தொடர்பான தேசிய கருத்தரங்கு இந்திய கருவுறுதல் துறை தலைவர் மருத்துவர் பங்கஜ் தல்வார் தலைமையில் டில்லியில் நடைபெற்றது.
புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற மோசமான பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத தால் அதிகரித்து வரும் உடல் பருமன், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள், நவீன வாழ்க்கை சூழலால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஆண் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என நிகழ்ச்சியில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆண் மலட்டுத்தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வரும் மருத்துவரும், இந்திய கருவுறுதல் அமைப் பின் தலைவருமான அமீத் பட்கி கூறுகையில்:-கருவுறாமை பிரச்சினையில் ஆண்களின் பங்கு சரிபாதி இருக்க பழியை பெண் மீது சுமத்திவிட்டு ஆண்கள் மவுனமாக இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய நல்வாழ்வு கவுன்சில் தலைவர் கமல் நாராயணன் கூறுகையில்:- ஆண் மலட்டுத் தன்மையை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும். எதார்த்தத்தை புரிந்து கொண்டு ஆண் பெண் இருவரையும் உள்ளடக்கிய சுகாதார பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இந்திய குடும்பங்களில் ஆண் மலட்டுத்தன்மை பற்றி பேசுவது இழிவு என்ற மனநிலை இன்னமும் உள்ளது. அந்த மனநிலை யிலிருந்து விலகி அதை அறிவியல் பூர்வமாக அணுகி இதற்கான தீர்வு குறித்து நகர வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் பேசினர்.