காசா, ஜூலை 28- காசா பகுதியில் இஸ்ரேல் அறிவித்துள்ள புதிய தற்காலிகச் சண்டை நிறுத்தத் தைப் பயன்படுத்தி, பட்டினியால் வாடும் 2 மில்லியனுக்கும் அதிக மான மக்களை இயன்றவரை சென்றடைய அய்க்கிய நாடுகள் சபை தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பிட்ட சில வட்டாரங்களில் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வரை தாக்குதல் நடத்தப்படாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இது மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
உலக உணவு அமைப்பு (World Food Programme – WFP), காசா மக்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை எடுத்துச் செல்லும் முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விதித் திருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நேற்று (27.7.2025) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் அதிகமான லாரிகளில் உணவும், மருந்துகளும், எரிபொருளும் காசாவுக்குள் செல்லத் தொடங்கியுள்ளன என்றும் உலக உணவு அமைப்பு கூறியுள்ளது.
காசா பகுதியில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், இந்த தற்காலிகச் சண்டை நிறுத்தமும், உதவிப் பொருட்கள் விநியோகமும் ஒரு சிறிய ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.