டேராடூன், ஜூலை 28- உத்தராகண்ட் மாநிலம் அரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மானசா தேவி கோவிலில் இன்று (ஜூலை 27) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தபோது, திடீரென பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
6 பேர் மரணம்
இந்த துயர சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. காயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர் வினய் சங்கர் பாண்டே, “அரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. போலீசார் பணியில் இருந்தபோதிலும், மோசமானதொரு நெரிசல் ஏற்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களில் இத்தகைய நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கோரிக்கை
கோவில் நிர்வாகம் மற்றும் காவலர்கள் தரப்பில் இருந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடம் கற்றுக்கொள்ளவில்லை
இதே போன்று 30.12.2021 ஆம் ஆண்டிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ளாததால் மீண்டும் மீண்டும் கூட்ட நெரிசல் மரணம் ஏற்படுகிறது
இந்த ஆண்டு மட்டும் அரித்துவார், பிரயாக், ஹத்ரஸ், புதுடில்லி ரயில் நிலையம் மற்றும் அசாம் காமக்யா மற்றும் பீகாரில் உள்ள ஜான்கிகி சூலா போன்ற இடங்களில் நடந்த கூட்ட நெரிசலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.