சிறப்பாகச் செயல்பட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருது

2 Min Read

சென்னை, ஜூலை 28- சி.என்.அண்ணாதுரை மற்றும் ரவி கிஷன் உள்பட பதினேழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் 2025ஆம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

பிரைம் பாயிண்ட் அறக் கட்டளை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’ விருதுகள் தலைநகர் டில்லியில் 27.7.2025 அன்று வழங்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான ஜூரி குழுவால் விருது பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார். என்.கே. பிரேமச்சந்திரன் (ஆர்எஸ்பி, கேரளா), சுப்ரியா சுலே (என்சிபி எஸ்பி, மகாராட்டிரா), சிறீரங் அப்பா பார்னே (சிவசேனா, மகாராட்டிரா) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 16ஆவது மற்றும் 17ஆவது மக்களவை பதவி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கும், மேலும் 18ஆவது மக்களவையிலும் தங்கள் சிறந்த செயல்திறனை தொடர்வதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் சி.என்.அண்ணாதுரை (திமுக), ஸ்மிதா வாக் (பாஜ), அரவிந்த் சாவந்த் (சிவ சேனா யுபிடி), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவ சேனா), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜ), பிரவீன் படேல் (பாஜ), ரவி கிஷன் (பாஜ), நிஷிகாந்த் துபே (பாஜ), பித்யுத் பரன் மஹதோ (பாஜ), பி.பி. சவுத்ரி (பாஜ), மதன் ரத்தோர் (பாஜ) மற்றும் திலீப் சைகியா (பாஜ) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.

விருதை பெற்றுக்கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கூறுகையில், ‘‘தமிழ்நாட்டின் சார்பில் ‘சன்சத் ரத்னா’ விருதை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

விருதை வழங்கிய பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் திருவண்ணாமலை தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு,தொடர்ந்து எனது தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதியளிக்கிறேன்.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்கும் வரை முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்புவோம்’’ என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *