முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் எதிரொலி!
மும்பை, ஜூன் 14 – ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீரஜ் கபூர் சார்பில் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அலுவலக நூலகங்களில் ஹிந்தி மொழி தொடர்பான புத்தகங்களை மட்டுமே வைக்கவேண்டும், அலுவலகங்களில் ஹிந்தி மொழி நாளிதழ்களை மட்டுமே வைக்க வேண்டும், ஹிந்தி மொழி பேசி வேலை பார்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இந்த சுற்றறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஹிந்தி பேசாத மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை சகித்துக்கொண்டிருக்கும் காலம் மலையேறிவிட்டதாகவும், ஹிந்தி திணிப்பை தி.மு.க. முழு மூச்சோடு எதிர்க்கும் என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்திருந்தார். நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன தலைவர் நீரஜ் கபூர் இந்த சுற்றறிக்கையை உட னடியாக திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஹிந்தி திணிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பு கோருவதாகவும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதிப்பதாகவும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.