சென்னை, ஜூலை 28 மாதா சிலையின் அருகே உள்ள உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பூர் எஸ்.எஸ்.வி. கோயில் தெருவில் வசிப்பவர் ரமேஷ் குமார். இவர் அதே தெருவில் அன்னை வேளாங்கண்ணி சிலை மற்றும் உண்டியல் வைத்து பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் (26.7.2025) பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்ததை ரமேஷ்குமார் கண்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், உண்டியலை உடைத்துப் பணத்தை திருடியது வியாசர்பாடியைச் சேர்ந்த விக்ரம் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், உண்டியலை உடைத்து திருடிய பணம் ரூ.3,200-அய் பறிமுதல் செய்தனர்.