புதுடில்லி, ஜூலை 27 ‘‘பெரியார் பாதையில் பயணித்த வர்கள், கொள்கையில் உறுதியானவர்கள’’ என்று மாநிலங்களவையில் மனோஜ் குமார் ஜா கூறினார்.
கடந்த 25.7.2025 அன்று நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் முடிவடைந்த உறுப்பினர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, தனது உரையினிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பாராட்டினார்.
அவர் பேசுகையில், ‘‘எனது தோழர்களான வைகோ, பி. வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா போன்றோர் தெற்கில் இருந்து வந்தவர்கள். இவர்க ளின் பதவிக்காலம் முடிகிறது.
தோழர்களின் கொள்கை உறுதி, தங்கள் கருத்துகளை மன்றத்தில் எடுத்துவைக்கும் அழகு மற்றும் கொள்கைப் பற்று போன்றவை இவர்கள் யாருடைய பாதையில் இருந்து வந்தார்கள் என்பதைக் காட்டுகிறது’’ என்று குறிப்பிட்டார்.
மேலும், ‘‘இவர்கள் தெற்கின் சீர்திருத்தவாதியான பெரியாரின் பாதையில் வந்தவர்கள். தங்கள் பதவிக்காலம் முழுவதும் பெரியாரின் கொள்கை வழியில் நடந்தவர்கள். அவர்கள் இருந்த இருக்கை வேண்டுமானால் வேறு ஒருவரால் நிரப்பப்படலாம். ஆனால், அவர்களைப் போல் உறுதியான, அனை வரையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர்கள் இனி வருவார்களா என்பது சந்தேகமே’’ என்று வழியனுப்பு விழாவில் நடந்த உரையில் மனோஜ் குமார் ஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மனோஜ் குமார் ஜா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் தந்தை பெரியாரின் நூலை கையில் வைத்துகொண்டு அவர் எழுதிய சச்சி ராமாயண் மற்றும் பெரியார் சிந்தனைகள் குறித்த நூல் பற்றி மேற்கோள் காட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
