பாட்னா, ஜூலை 27- பீகாரில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) முக்கிய தலைவருமான தேஜஸ்வி யாதவைக் கொலை செய்ய ஆளும் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் பாஜக கட்சிகள் சதி செய்கின்றன என அவரது தாயும், மாநில மேனாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சில மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஜேடியு-பாஜக கூட்டணிக்கும், தேஜஸ்வி தலைமையிலான ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆர்ஜேடி கட்சி தேர்தலைப் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாக தேஜஸ்வி சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், பிடிஅய் செய்தி நிறுவனத்திற்கு 25.7.2025 அன்று பேட்டியளித்த பீகார் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி கூறியதாவது:
“பீகாரில் கொலைகள் நடப்பது இப்போது சகஜமாகிவிட்டது. ஏற்கெனவே நான்கு முறை தேஜஸ்வியை கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஒருமுறை அவர் சென்ற கார் மீது லாரியை ஏற்ற முயன்றனர். அவரைக் கொலை செய்யும் சதியில் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஈடுபட்டிருக்கலாம். சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்குக் கடும் போட்டியளிக்கும் தேஜஸ்வி யாதவை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” என்று ராப்ரி தேவி ஆவேசமாகத் தெரிவித்தார்.