ஜெய்சால்மேர், ஜூலை 27- ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த கோர விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். 23 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டுள்ளனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது
ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் காலைப் பிரார்த்தனைக்குத் திரண்டிருந்தனர். அப்போது மழைபெய்துகொண்டு இருந்ததால் பள்ளி உட்பகுதியில் அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டு இருந்தனர். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சுமார் 35 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜலாவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் கூறுகையில், “இந்த விபத்தில் 7 குழந்தைகள். நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் இறுதிச் சடங்குகள் அவர்களது கிராமத்தில் நடைபெற்றன,” என்றார்.
விபத்தில் காயமடைந்த மாணவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு மாணவனின் தந்தை தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காவல் வாகனங்களை சேதப்படுத்திய தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநில அரசு, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் பேசியதாகவும், ஜலாவருக்கு நேரில் செல்லக்கூடும் என்றும் மாநில துணை அமைச்சர் டாக்டர் பிரேம் சந்த் பைர்வா தெரிவித்தார்.