அண்ணா தி.மு.க. பெயரிலும், கொடியிலும் அண்ணா இருக்கலாமா?

2 Min Read

[கீழடி குறித்து அதிமுக சார்பில் வெளியிடப் பட்டுள்ள விளம்பரத்தில் கருநாடக சைவப் பார்ப்பனர்கள் போன்று தோற்றமளிப்பவர்கள் இடம் பெற்றுள்ளது ஏன்? எடப்பாடி பதில் சொல்வாரா?]

சிவகங்கை அதிமுகவினரின் விளம்பரக் காணொலி: “கீழடி நாகரிகத்தை உலகறியச் செய்த புரட்சித் தமிழரே வருக!” என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்காக சிவகங்கை மாவட்ட அதிமுகவினரால் தயாரிக்கப்பட்ட ஒரு விளம்பரக் காணொலி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொலியில், கருநாடகத்தைச் சேர்ந்த சைவப் பார்ப்பனர்களைப் போன்ற தோற்றத்திலும், அதே பாணியிலான ஆடையிலும் இருக்கும் சிலரைக் கொண்டு கீழடி குறித்த விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்தக் காணொலியில் அவர்கள் பேசுவதாக அமைந்த வரிகள் பின்வருமாறு: “சிவகங்கையிலிருந்து தான் உலக நாகரிகம் ஆரம்பித்தது. கீழடி நாகரிகத்தை உலகறியச் செய்த கீழடி நாயகரே, புரட்சித் தமிழரே வருக வருக!” என்று அவர்கள் பேசுவதுபோல் உள்ளது.

கீழடி அகழாய்வு குறித்த ஆய்வறிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு இன்றுவரை வெளியிடாமல் தமிழர் வரலாற்றை வஞ்சித்து வருகின்றது.

இத்தகைய சூழலில்,ஒன்றிய பாஜக அரசைக் கேள்வி கேட்க அஞ்சி, கீழடி குறித்த விளம்பரத்தில் தமிழ்நாட்டிற்குத் தொடர்பே இல்லாத வகையில் ஆடை அணிந்தவர்களைக் கொண்டு விளம்பரம் செய்வது ஏன் என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தலங்களிலும், காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகமான கீழடியை மய்யப்படுத்தி வெளியாகும் விளம்பரங்களில், தமிழ் மரபுக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பில்லாத தோற்றங்களைக் கொண்டவர்களைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும், இது தமிழ் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்றும் ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்காமல்,   இத்தகைய விளம்பரங்கள் மூலம் கீழடியையும், தமிழர் பண்பாட்டையும் சிறுமைப்படுத்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். நாக்பூர் கட்டளைக்கு ஏற்ப அதிமுக களமிறங்கி உள்ளது. இந்த விளம்பரக் காணொலி குறித்து அதிமுக தரப்பிலிருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கீழடி நாகரிகம், தமிழர் – திராவிடர் நாகரிகம் என்று பறைசாற்றும் நிலை தொல் பொருள் ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.

கி.மு.8ஆம் நூற்றாண்டு நாகரிகம் என்று மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை 3ஆம் நூற்றாண்டு என்று திருத்தி அறிக்கை கொடுக்குமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அறிவு நாணயத்தோடு மறுத்து விட்டார். இதற்காக உலகம் முழுவதும் அவர் பாராட்டப்படுகிறார்கள்.

இதுபற்றி எல்லாம் வாய்த் திறக்காத அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அதே நேரத்தில் கீழடிக்கு அவரது ஆட்சி உரிமை கொண்டாட வேண்டும் என்று எண்ணி, பார்ப்பனர்களைக் கொண்டு பறைசாற்றும் வகையில் இப்படியொரு விளம்பரத்தைச் செய்வது வெட்கக் கேடு அல்லவா!

இவர்கள் கட்சியிலும், கொடியிலும் ‘அண்ணா’ இருக்கலாமா? அ.தி.மு.க. தோழர்களே சிந்திப்பீர்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *