புதுடில்லி, ஜூலை 26- திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களவையில் இந்தியப் பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை விகிதங்கள் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பினார்.
கனிமொழி எம்.பி
இந்தக் குறைவுக்கு விழிப்புணர்வு இல்லாததும், பரிசோதனை வசதிகள் பரவலாக இல்லாததும் முதன்மைக் காரணம் என்பதை அரசு அறிந்திருக்கிறதா என்று அவர் வினவினார். மேலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய பொதுமக்களின் புரிதலை அரசு மதிப்பிட்டிருக்கிறதா, மாநில வாரியாக விழிப்புணர்வு மற்றும் சோதனைக்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதா, அதன் விவரங்கள் என்ன என்றும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, சமூக சுகாதார மய்யங்கள், ஆரம்ப சுகாதார மய்யங்கள் மற்றும் நடமாடும் சோதனை மய்யங்கள் மூலம், பின்தங்கிய மற்றும் கிராமப்புறங்களில் இந்தப் பரிசோதனைகளை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் கேட்டிருந்தார்.
அமைச்சரின் பதில்
இந்தக் கேள்விகளுக்குப் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளித்தார். அவர், சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள், உலக புற்றுநோய் நாள் கடைப்பிடிப்பது மற்றும் அச்சு, மின்னணு, சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியான பரப்புரைகள் ஆகியவை அடங்கும் என்றார்.
மேலும், தேசிய சுகாதார மிஷன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டங் களுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையின் தற்போதைய விகிதத்தை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.