இணையவழி பண மோசடிக் கும்பலின் மனித நேயம் கடத்தப்பட்ட சீன மாணவனின் அறிவைப் பாராட்டி விடுவித்தனர் நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள் என்று அறிவுரை கூறி பணம் கொடுத்தனர்

2 Min Read

யங்கூன், ஜூலை 26- இணையவழி மோசடிக் கும்பலால் கடத்தப்பட்ட சீன மாணவன் ஒருவரின் அறிவை மெச்சி அவரை விடுவித்தக் கும்பல், அவருக்குப் பணமும் கொடுத்து நல்ல எதிர்காலத்தையும் அமைத்துக் கொள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை நிரூபிப்பதைப் போல் நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

சீன கல்லூரி மாணவர்

சீனாவின் சியான் நகரைச் சேர்ந்தவர் பெங் யுசுவான். அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டே பணத் தேவைக்காக பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

பல இடங்களில் முயன்றும் சரியான வேலை கிடைக்காததால் வேலை தரும் செயலி மூலம் வேலைக்கு முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மியான்மர் எல்லையில் உள்ள இணைய வழியாக மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் கும்பலின் பிடியில் சிக்கிக் கொண்டார்.

அந்தக் கும்பல் பெங் யுசுவானை பணயக் கைதி யாக வைத்து அவரின் பெற்றோரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டது.

இந்த நிலையில் மகனை காணாமல் பல இடங்களில் தேடிய பெங் யுசுவானின் தாயார் மகனிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். அப்போது  மியான்மரைச் சேர்ந்த ஒருவர் பேசி மகனை விடுவிக்க வேண்டுமானால் பணயத் தொகை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது தான் மகன் கடத்தப்பட்டு இருப்பதை உணர்ந்த பெங் யுசுவானின் தாயார் காவல் துறையைத் தொடர்பு கொண்டார்.

சீன காவல்துறையும் மியான்மர் காவல்துறையும் ஒருங்கிணைந்து பெங்கை மீட்கும் பணியில் துரித மாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் மோசடி கும்பல் பெங்கை 10 இடங்களுக்கு மாற்றியது. இறுதியில் பெங் தாய்லாந்து எல்லையில் இருப்பது தெரியவந்ததும், காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக தங்களிடம் சிக்கிய மாண வனின் தொழில்நுட்ப திறமை மற்றும் புத்திசாலித் தனத்தை கண்ட மோசடிக் கும்பல்  அவரை விடுவித் தனர்.

அப்போது “நீ வாழ்க் கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்” என்று அறிவுரை கூறி செலவுக்கு பணமும் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

மோசடிக் கும்பலின் இந்த மனிதநேயச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *