மகாராட்டிரா மாநிலம் மும்பையில், கழகத் தோழரின் தொடர் பணிகள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.
“பெரியார் பாலாஜி” என்று பரவலாக அறியப்பட்டவர் இவர். எனினும் “பாலாஜி” என்பது கடவுள் சார்ந்து இருக்கிறது என்பதால், ‘பெரியார் பாலா’ எனத் தம் பெயரை அண்மையில் மாற்றிக் கொண்டவர்.
உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் சிறப்பாகச் செய்து வருபவர். தொழிலதிபர் என்று அழைக்கக் கூடிய தகுதியைப் பெற்றவர். தமிழ்நாட்டில் பிறந்தாலும், மும்பையில் வசிப்பதால் மராத்திய மக்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர்.
மும்பைக்கு ஹிந்தி வேண்டாம்; மராத்தியே போதும் என்கிற கிளர்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே தம் வணிகப் பலகையில் மராத்தி மொழியில் எழுதி திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பெரியார் பாலா.
அதேபோல தங்கள் கடைக்கு வரும் மராத்தியர்கள் ஹிந்தியில் பேசினால், ‘மராத்தியில் பேசுங்கள்’ என வலியுறுத்தி, தானும் மராத்தி மொழியிலேயே பேசி வந்தவர் பெரியார் பாலா.
மராத்திய மாநில அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுடன் நல்லுறவு கொண்டவர். பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருப்பவர்.
‘விடுதலை’ வாசிப்பைத் தவறாதவர்
மிக முக்கியமாக ‘விடுதலை’ நாளிதழை நாள்தோறும் வரி விடாமல் படிப்பவர். அப்படி படிக்கும் போது முக்கியமான செய்திகளைத் தொகுத்து மும்பை வாட்சப் குழுக்களில் பகிர்பவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மும்பையில் வசித்தாலும், அவரின் எண்ணங்களும், உணர்வுகளும் தமிழ்நாட்டிலேயே உள்ளன. குறிப்பாகப் பெரியார் திடலை சுற்றியே வருகின்றன.
அண்மையில் கழக மகளிர் 54 பேரின் நேர்காணல் “கொள்கை வீராங்கனைகள்” எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. அந்நூலின் 100 பிரதிகளை வாங்கி, மும்பை வாழ் இயக்க மகளிர் மற்றும் பொது மகளிருக்கு வழங்க ஏற்பாடு செய்தவர்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
அண்மையில் கூட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “சமஸ்கிருதத்திற்கு 2533 கோடியா?”, எனும் துண்டறிக்கையை 1000 வாங்கி, மும்பை வாழ் தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறார்.
சிறு, சிறு விசயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து செய்யும் தோழர்கள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளனர். அப்படியான தோழர்கள் மும்பையிலும் உள்ளனர் என்பதில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு!
அதேநேரம் மாநில உரிமைகள் தொடர்பான நமது திராவிட இயக்கச் செய்திகளை, தமிழில் இருந்து மராத்திய மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் பெரியார் பாலா!
மகாராட்டிரா மாநிலத் திராவிடர் கழகப் பொருளாளராக இருக்கும் இவர், பெரியார் உலகத்திற்கு அண்மையில் ஒரு இலட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது!