மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
உறைபனி படர்ந்த புல்தரை, வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்தி இருந்த இளங்காலை கதிரவனின் காலைக் கதிர்கள் இலைகளில் படிந்திருந்த பனித்துளிகளை விழுங்கியிருக்கும் நேரம்.
காலை மணி 9.00. புற நோயாளிகள் பகுதியில் அமர்ந்து இருந்தேன். தீடீரென வெளியே அவசர ஊர்தி (Ambulance) வந்து நிற்கும் சத்தம். தூக்குப் படுக்கையில் (Stretcher) ஒரு நோயாளி இறக்கப்பட்டு, உள்ளே கொண்டு வரப்பட்டார். கூடவே ஒரு பத்து பேர் ஆண்கள், பெண்கள் என்று திமுதிமுவென உள்ளே வந்தனர். நான் உடனே, “என்னங்க, என்ன ஆச்சு?” என்று கேட்க, கூட்டத்தில் ஒருவர், “சார், காட்டெருமை (Bison] உதைச்சுடுச்சு. வாயில் இருந்து ரத்தம் கொட்டுது. துணி வைச்சு, தூக்கி வந்திருக்கோம்” என்று கூறினார்.
1. கண்களிலிருந்து பற்கள் வரை வெள்ளைக் கோடு போல் தெரிவது கம்பிகள்.
2 கண் சுற்று எலும்பில் துளையிட்டு கம்பி செலுத்தப்பட்டுள்ள படம். 3. காட்டெருமை உதைத்ததால் முகத்தின் மேல்தாடை எலும்பு பல துண்டுகளாக உள்ள படம்.
“பேர் என்னங்க? எங்கே இருந்த வர்ரீங்க?” என்று கேட்டேன். “சார், இவுரு பேரு தருமன். வயசு 42. பக்கத்திலே இருக்கிற கிளன்டேல் தேயிலைக் காட்டிலே வேலை செய்யறாறு. நாங்களும் அங்கேதான் வேல செய்யறோம். தேயிலை பறிச்சுக்கிட்டு இருந்தோம்.திடீரென ஒருகாட்டெருமை செடிக்கு நடுவுலே இருந்துச்சு. அது ஒரு வளைவு. நாங்க யாருமே முதல்ல அத கவனிக்கல. தருமனும் அங்க இருந்தாரு. அவரும் அத கவனிக்கல. தேயில் பறிச்சுக்கிட்டே காட்டெருமை நின்ன இடத்துக்கு கிட்ட போயிட்டாரு. திடீரென அது அவர ஒதச்சிடுச்சு. “அய்யோ” என கத்திக் கொண்டு கீழே விழுந்துட்டாரு. பக்கத்திலே இருந்த நாங்கள்ளாம் ஓடி வந்தோம். நிறைய பேரு வர்றதப் பார்த்து எருமை திரும்பி ஓடிடுச்சு. கீழ இருந்த தருமனைக் பார்த்தோம். அவர் முகத்தில் ரத்தம். ரத்தம் வாயிலிருந்து தான் வந்து கொண்டிருந்துச்சு. மூஞ்சியெல்லாம் ரத்தம் – வாயிலிருந்து வந்ததால் ஏற்பட்டிருந்திச்சு. சட்டையெல்லாம் கூட ரத்தம் வழிஞ்சிருச்சு. உடனே எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு அவர தூக்கிட்டுப் போனோம். அங்க மூஞ்சியெல்லாம் துடச்சு சுத்தம் செஞ்சாரு டாக்டர். “மூஞ்சிலே காயம் ஏதுமில்ல. வாயில் இருந்துதான் ரத்தம் வருது. நீங்க குன்னூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கன்னு” என்று சொல்லி, ஆம்புலன்ஸ்ல அனுப்பி வச்சாரு” என்று கூட வந்தவர் சொன்னார்.
நான் நோயாளியைப் பரிசோதிக்கத் தொடங்கினேன். முகம் முழுவதும். வீக்கமாக இருந்தது. வாயில் இருந்து ரத்தம் வந்த வண்ணம் இருந்தது. இரண்டு கண்களை சுற்றியும் வீக்கம். கண் இமைகளிலும் வீக்கம். கண்களை லேசாகத்தான் பார்க்க முடிந்தது. இமைகளில் வீக்கம் இருந்ததால் கண்களை முழுமையாக இமைகளை திறக்க முடியவில்லை. கண்களைச் சுற்றி பெரிய கருவளையம் (Circum orbital ecchymosis). கண்களை சோதித்தேன். பார்வையில் கோளாறு இல்லை. ஆனால் கண்களின் வெண் படலத்தில் (Scelera) சிகப்பாக (sub-conjunctival hemorrhage) இருந்தது. காதுகள் இயல்பு நிலையில் இருந்தன. மூக்கிலிருந்து இடது புறம் லேசான ரத்தக்கசிவு இருந்தது. நோயாளி முழு உணர்வோடு இருந்தார்.
“என்ன ஆச்சுங்க தருமன்?” என்று கேட்டேன். அவர் கூடவந்தவர் சொன்ன செய்தியையே அவரும் சொன்னார். முகத்தில் வீக்கம் அதிகமாக இருந்ததால் இயல்பாகப் பேசுவதுபோல் அவரால் பேச முடியவில்லை. வாயையே முழுமையாகத் திறக்க முடியவில்லை. கொஞ்சம் சங்கடத்துடன் வாயைத் திறந்து ரத்தம். எங்கிருந்து வருகிறது என்று சோதித்தேன். முன் பற்களின் (மேல்தாடை) ஈறுகள் வழியாக ரத்தம் வருவதை உணர்ந்தேன். மேல் தாடையில் இருந்த முன் பற்களோடு சேர்ந்து, தாடை எலும்பும் அசைவதை உணர்ந்தேன். பற்களைப் பிடித்து அசைக்கும் பொழுது, வலி தாங்காமல் தருமன் கத்தினார். “சார், ரொம்ப வலிக்குது, விட்டுருங்க” என்று கெஞ்சினார்.
முழு உணர்வோடு இருந்ததால் மூளையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. மண்டை எலும்புகளிலும் எந்த பாதிப்பும் இல்லை என்று உணர்ந்தேன். முகத்தின் மேல் நாடி (Maxilla) எலும்புகள் உடைந்திருப்பதை தொட்டுணர்ந்து (Palpation) உறுதி செய்தி கொண்டேன். முகத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு, உடலில் வேறு எங்காவது அடிபட்டுள்ளதா என்று ஆய்வு செய்தேன். நல்வாய்ப்பாக உடலில் வேறு எந்த இடத்திலும் அடியோ, காயங்களோ இல்லை நோயாளியை ஊடுகதிர் படம் எடுக்க (x-Ray) தூக்குப் படுக்கையிலேயே வைத்து அனுப்பினேன். (எங்கள் மருத்துவமனையில் நகரும் ஊடுகதிர் கருவி (Mobile X-Ray) கிடையாது.) ஓர் அரை மணியில் ஊடுகதிர் என்னிடம் வந்தது.
முகத்தின் மேல் தாடை எலும்புகள் (Maxilla) பல துண்டுகளாக உடைந்திருப்பது உறுதியானது. மேல் தாடை எலும்புகள் உடைந்திருப்பதால் பற்களைப் பிடித்து அசைத்தபோது எலும்போடு சேர்ந்து பற்களும் அசைந்ததை அறிந்தேன். முதலில் அவசர மருத்துவம் செய்து, இரத்தம் வெளியேறுவதை ஊசி மூலம் மருந்துகளை செலுத்தி அதைக் கட்டுப்படுத்தினேன். வலியைக் குறைக்கும் மருந்துகளையும் செலுத்தினேன். நோயாளியோடு வந்தவர்களிடம் பேசினேன். அறுவை மருத்துவம் மூலம்தான் முகத்தை சீராக்க முடியும் என்பதை விளக்கினேன். அவர்களும் சம்மதித்தனர்.
நோயாளியை மருத்துவமனையின் உள் நோயாளிகள் பகுதியில் சேர்த்தேன். அறுவை மருத்துவம் உடனே செய்ய வேண்டியிருந்ததால், ஆய்வுகள் உடனே செய்ய ஆயத்தங்கள் மேற்கொண்டேன். இதய மின் அலைப்பதிவு (ECG), ரத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் சீராக இருந்தன. மயக்குநரின் அனுமதி கேட்டு, அதுவும் பெறப்பட்டது.
எல்லா ஆய்வுகளும், அவசர மருத்துவம் செய்ய வேண்டியிருப்பதால் இரண்டு மணி நேரத்தில் முடிக்கப்பட்டது. நோயாளி அறுவை அரங்கிற்கு மாற்றப்பட்டார். முக எலும்புகளில் அடிபட்டால், பொதுவாக சிறிய எலும்புப் பட்டைகளைப் (Mini bone plates) பொருத்துவோம். இரண்டாம் முறை மருத்துவமாக ஸ்டையின்லெஸ் ஸ்டீல் கம்பிகளைப் பொருத்தி செய்வோம். தருமனுக்கு முக எலும்புகள் பல துண்டுகளாக உடைந்திருந்ததால் எலும்புப் பட்டை பொருத்தும் மருத்துவம் செய்ய முடியாத நிலை. அதைப் போலவே எலும்புகளில் துளையிட்டு, கம்பிகள் போட்டும் கட்டமுடியாது. துளையிடும்போது, எலும்பு துண்டு, துண்டாக இருப்பதால், துளையிடும் கருவியை வைக்கும்பொழுது அமுங்கும்.
துளையிடுவது கடினமாக இருக்கும். அதனால் மாற்றுமுறையில் மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன். நோயாளிக்கு மயக்க முன் மருத்துவம் செய்யப்பட்டது. மருந்துகள் செலுத்தப்பட்டது. மயக்க மருந்து குழாய், மூச்சுக் குழாய்கள் செலுத்தப்பட்டு, நோயாளி மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டார். அறுவை மருத்துவத்தை துவக்கினேன். கண் சுற்று எலும்புகளில் (Orbital (Inferior) Margeu) துளையிட்டு அதில் கம்பிகளை செலுத்தி அதை பற்களோடு இணைத்து எலும்பு முறிவுகளை பொருத்த முடிவு செய்தேன் (Infra Orbital Suspension). முதலில் வாயில் பற்களை சீராக இருக்கும்படி ஸ்டெய்ன்லெஸ் கம்பிகளால் கட்டினேன். (Inter Dental wiring). மின் கையுறைகளை மாற்றிக் கொண்டு, கண் சுற்றெலும்புப் பகுதிக்கு வந்தேன். கண் இமைகளை ஒட்டி, சுற்றெலும்பை ஒட்டி கீறல் (Incision) போட்டேன். தோல், சதைகளை ஒதுக்கி, எலும்பை அடைந்தேன். அந்த எலும்பில் துளையிட்டேன். மிகவும் எச்சரிக்கையாக செய்ய வேண்டிய செயல்முறை இது.
கண் சுற்று எலும்பின் வெளியிலிருந்து, துளையிட்டு, கண் எலும்பின் உட்புறம் (கண் எலும்புக் குழியில் – Orbital cavity) வரை இந்தத் துளையைச் செலுத்த வேண்டும். துளையிடும் கருவி, ஒரு நிமிடத்திற்கு 15000 முதல் 20000 சுற்றுகள் சுற்றக் கூடியது. தப்பித் தவறி, சற்றே ஆழமாகப் போனால் கண்ணையே துளைத்து விடும். கண்களே குருடாகும் ஆபத்து உடைய செயல் முறை இது. மிகவும் எச்சரிக்கையோடு, கண்களைப் பாதுகாப்போடு ஒதுக்கி துளையை வெளியிலிருந்து, உட்புறம் வரை ஏற்படுத்தினேன். பின் அதன் வழியாக ஒரு மெல்லிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பியைச் செலுத்தினேன். கம்பியும் கண்ணை குத்தி விடாதவாறு வெளியே கொண்டு வர வேண்டும். மிகவும் எச்சரிக்கையோடு கண்ணில் படாதவாறு, கண் குழியிலிருந்து அந்தக் கம்மியை வெளியே கொண்டு வந்தேன். (பார்க்க இரண்டாம் படம்) பின் வாயைத் திறந்து மேல் தாடையின் உட்புறம் சவ்வில் துளையிட்டு, அதன் வழியே ஒரு “தமனிக் கவ்வி”யை (cautery forceps) செலுத்தினேன்.
கண் சுற்றெலும்பில் இருந்த கம்பியை, தமனிக் கவ்வியில் பிடித்து வாயின் உள் இழுத்துக் கொண்டு வந்தேன். இப்பொழுது கண் பகுதியிலிருந்த கம்பி வாயின் உட்புறம் வந்துவிட்டது. வாயில் பற்களைச் சுற்றி கட்டியிருந்த கம்பிகளோடு கண் பகுதியிலிருந்து, இழுத்து வந்த கம்பியை இறுக்கமாக இணைத்தேன். இப்படி செய்வதன் மூலம் உடைந்த மேல் தாடை எலும்பு சீராக அதன் மூலம் பொருந்திவிடும். இதை கண் சுற்றெலும்பு பொருத்துதல் (Infra Orbital Suspension) என்று கூறுவோம். ஒரு புறம் பொருத்திய பின் அடுத்த பக்கமும் இதே செயல் முறையில் எலும்புகளைப் பொருத்தினேன். எலும்புகள் மீண்டும் சீராக பொருத்தப்பட்டதால் ரத்தம் வருவது நின்று விட்டது. பின் கண் சுற்றெலும்பு கீறல்களைத் தையல் போட்டு இணைத்தேன். வெற்றிகரமாக அறுவை மருத்துவம் முடிந்தது. மயக்க மருந்து குழாய், மூச்சுக் குழாயிலிருந்து அகற்றப்பட்டது.
நோயாளியின் உடலநிலை சீராக இருந்ததால் படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். முகத்தில் பொருத்தப்பட்ட கம்பிகள் எட்டு வாரம் கழித்து, ஒரு சிறிய செயல்பாட்டின் மூலம் வாய் வழியே எடுக்கப்பட்டது. பற்களைச் சுற்றி போடப்பட்ட கம்பிகளும் அகற்றப்பட்டன. நோயாளிக்கும் மகிழ்ச்சி. எனக்கு அதை விட மகிழ்ச்சி என்று சொல்லவும் வேண்டுமா?
“நான் என்னையே நம்பித்தான் இதைச் செய்கிறேன். எந்தவித பாராட்டையோ, விருதையோ இதைச் செய்வதற்கு நான் எதிர் பார்க்கவில்லை. வேறு யாரும் இதைச் செய்ய முன் வராததால், என் தலை மேல் போட்டுக் கொண்டு இந்தப் பணியை செய்கிறேன்” என்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் வாசகங்கள்தான் எனக்கு வழிகாட்டி!