தென்காசி, ஜூலை 25- கேரளாவில் இருந்து தமிழ் நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவ தாக தொடரப்பட்ட வழக்கில், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கேரளாவில் இருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.
இதைத் தடுக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தாக்கல் செய்த பதில் மனுவில், நெல்லை ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை அலுவலர்களை இணைத்து, மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கிறது. கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த மனு முடிக்கப்பட்டது.
ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. எனவே, மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, “கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரும் மருத்துவக் கழிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மருத்துவக் கழிவுகள் உள்ளே கொண்டு வருவது தடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறி அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.