மதுரை ஆதீன நிலத்தில் உள்ள கிணற்றில் ஆண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா?

திருப்புவனம், ஜூலை 25- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கட்டமன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, முக்குடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளன.

பெரும்பாலும் விவசாயம் செய்யப்படாத இந்த நிலங்கள், கிராம மக்களால் மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முக்குடியில் மட்டும் 960 ஏக்கர் நிலம் மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமானது.

இந்த நிலத்தின் ஒரு பகுதியில் புங்கை, பூவரசு மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் விவசாயத்திற்காக சுமார் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிணறு தோண்டப்பட்டது.

20 அடி நீள, அகலமுள்ள சதுர வடிவ இந்தக் கிணற்றில் கோடைகாலத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

கிணற்றில் ஆண் உடல்

இந்தக் கிணற்றில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் உடல் மிதப்பதாக முக்குடி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) முரளிதரன், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தகவலறிந்ததும், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் தடயவியல் நிபுணர் சிவகுரு முன்னிலையில், மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து உடல் பாகங்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல் பல மாதங்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது. உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும், சட்டை உள்ளே செருகப்பட்ட நிலையில் கருப்பு பேண்ட் முழுமையாக உள்ளது.

இறந்தவரின் வயது, அவர் எப்படி இறந்தார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.

இதையடுத்து, காவல் துறையினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். இறந்தவர் யார் என்று அடையாளம் தெரிந்த பின்னரே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து முழுமையான விவரங்கள் வெளிவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம் ஆணை

புதுடெல்லி, ஜூலை 25- இலவசங்கள் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட ஒரு மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஒன்றிய, மாநில அரசுகள் இலவசங்களோ, ரொக்கப்பரிசோ, நலத்திட்டங்களோ அறிவிப்பதற்கு முன்பு, அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து நிபுணர்களை கொண்டு விரிவான ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், மாநில திட்ட ஆணை ஆகியவற்றிடம் ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டும்.

மேலும், இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, அந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை தாண்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி, அதை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *