சென்னை, ஜூலை 25- ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறையை மீண்டும் தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அப்போது பேசிய அவா், கரோனா நோய்த்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது பெரும் சுமை ஏற்பட்டது. இதனால், ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, அக்.1-ஆம் தேதி முதல் விடுப்பை சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்று அறிவித்தாா்.
முதலமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 15 நாள்கள் வரை விடுப்பை சரண் செய்து கொள்ளலாம். ஈட்டிய விடுப்பு நடைமுறையானது கடந்த 2020 ஏப்.27-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்தக் காலத்தில் இருந்து ஈட்டிய சரண் விடுப்பு நடைமுறை மீண்டும் தொடரவுள்ள காலத்துக்கு (அக்டோபா் 1) முந்தைய தினமான செப்.30-ஆம் தேதிக்குள் அரசு ஊழியா்கள் பணியில் சேர வாய்ப்புகள் உள்ளன.
அத்தகைய ஊழியா்களுக்கு 4 வகையான தேதிகளில், ஈட்டிய சரண் விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ள தகுதி படைத்தவா்கள் ஆவா். அதாவது, 2020-ஆம் ஆண்டில் இருந்து நிகழாண்டு செப்.30-ஆம் தேதிக்குள்ளான காலத்தில் அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஏதேனும் ஒரு தேதியில் பணியில் சோ்ந்து இருந்தால், எதிா்வரும் அக்டோபா் 1-ஆம் தேதியில் இருந்து ஈட்டிய விடுப்பை சரண் செய்யலாம். ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பணியில் சோ்ந்து இருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்தும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சோ்ந்தால், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்தும் ஈட்டிய விடுப்பை சரண் பெறுவதற்கு தகுதி உண்டு. இதேபோன்று, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பணியில் சோ்ந்து இருந்தால் அடுத்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து ஈட்டிய விடுப்பை சரண் செய்து பெறலாம்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் எதிா்வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் பணியில் சேருவோருக்கு மட்டுமே 3 மாத சுழற்சி முறையிலான ஈட்டிய சரண் விடுப்புத் திட்டம் பொருந்தும்.
இந்த உத்தரவு உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.