கோலாலம்பூர், ஜூலை 25- மலேசியாவில் பேருந்துகளில் இருக்கை வார்ப்பட்டை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மீறிய ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் என சுமார் 1,200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த ஜூன் மாதம் பேராக் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்தனர். இந்த கோரவிபத்தின் எதிரொலியாக இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
மலேசியாவில் ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் என அனைத்துவகைப் பேருந்துகளுக்கும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோர் மீது அபராதத்தோடு இரண்டாம் முறை பிடிபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது
வெளிநாட்டவர் உள்நாட்டவர் என அனைவருக்கும் பொதுவான விதி
சீட் பெல்ட் அணியாமல் இருந்து எச்சரிக்கை வாசகத்தைக் கண்டுகொள்ளாமல் சாக்குப்போக்குச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுப்பயணிகள் அல்லது வெளிநாட்டினர் என அனைவருக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.