தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில் முகலாய மன்னர்களைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
சரித்திரத்தின் இருண்ட கால கட்டங்களில் சிலவற்றை விளக்குவது முக்கியம் என்று என்.சி.இ.ஆர்.டி. இதற்குக் காரணம் கற்பிக்கிறது.
தனது பிற்கால ஆட்சியில்தான் அமைதி மற்றும் நல்லெண்ணத்தைப்பற்றி அக்பர் பேசத் தொடங்கினார் என்றும் இப்பொழுது வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமர் கோயிலை இடித்து விட்டு, அதன்மீது தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று நீதிமன்ற தீர்ப்புகளே கூறியுள்ளன; மக்களின் மன சாட்சிப்படி என்பதையும் கடந்து, இந்தத் தீர்ப்பை நான் எழுதவில்லை; மாறாகக் கடவுள் தான் எழுதினார் என்று சொல்லும் அளவுக்கு நீதிமன்றமும் சென்றதுண்டு.
ஏ.பி. வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே பாடத் திட்டங்களில் மதவாதக் கோணல்களைத் திணிக்கும் வேலை ஆரம்பமாகி விட்டது.
பேராசிரியர் சுமித் சர்க்கார், பேராசிரியர் கே.எம். பணிக்கர், உறுப்பினர் செயலாளர் டி.கே.வி. சுப்பிரமணியம் உள்ளிட்ட புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வரலாற்றாளர் என்று எந்த வகையிலும் கூறத் தகுதியற்றவர்கள் இந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் கோயில் இருந்தது எனப் பொய்யானவற்றை அள்ளிவிட்ட பி.ஆர். குரோவர் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்திய விஞ்ஞானக் கழகத்தின் தலைவராக பிஜேபியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சோந்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பிஜேபி ஆண்ட மாநிலங்களில் நவம்பர் 14 நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாகக் கொண்டாட ஆணையிருந்தும், கோகுலாஷ்டமியைத்தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) குழந்தைகள் பிறந்த நாளாகக் கொண்டாடினார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது அரசின் ஆணை; ஆனால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளிலோ மகாபாரதத்தை எழுதியதாகக் கரடி விடும் வியாசரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினர்.
உத்தரப்பிரதேசத்தில் இவர்கள் நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இடம் பெற்றவை ‘‘முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?’’
‘பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.’’ (‘அவுட் லுக்’ 10.5.1999)
கணக்குப் பாடத் திட்டத்தையும் விட்டு வைக்கவில்லை ‘10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் இத்தனை நாளாகும். 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாளாகும்?’’ இதுதான் கணக்குப் பாடமாம்.
யூதர்கள்மீது வெறியைக் கிளப்பிட அடால்ப் ஹிட்லர் இந்தமுறையைத்தான் பின்பற்றினார். யூதர் பெற்ற இலாபம் எவ்வளவு என்பதற்குப் பதிலாக, யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு என்று கேட்கப்பட்டது. பாசிஸ்டுகளும், நாஜிகளும் கையாண்ட அதே பாணியைத்தான் பிஜேபி சங்பரிவார்க் கூட்டமும் பின்பற்றி வருகின்றன என்பது கண்ணெதிரே காணும் காட்சியாகும்.
இயேசுநாதர் இமயமலைக்கு வந்து ஹிந்து சாமியார்களிடம் உபதேசம் பெற்றுதான் பைபிள் எழுதினார்.
கிருஷ்ணன் கடவுளிடத்தில் இருந்துதான் கிறிஸ்து வந்தார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா?
இப்படி எத்தனை எத்தனையோ! இப்பொழுதுகூட இஸ்லாமி யர்களின் பெயர் தாங்கிய ஊர்களின் பெயர்களின், சாலைகளின் பெயர்களையும் மாற்றிக் கொண்டுதானே திரிகிறார்கள்.
எடுத்துக்காட்டாக அலகாபாத் என்பது பிரக்யாராஜ் என்றும் (2018), முகல் சராஜ் என்பது தீனதயாள் உபாத்தியாயா ஜங்சன் என்றும் (2018), அவுரங்காபாத் என்பது சத்ரபதி சாம்பாஜி நகர் என்றும் (2023) மாற்றப்பட்டு விட்டதே!
துக்ளக் சாலை என்பதை சாமி. விவேகானந்தா சாலையாக்கி ஹுமாயின் சாலை, ஷாஜகான் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட வேண்டும் என்று கொடி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படியே ஒவ்வொன்றாக சன்னமாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் ஒரே ராஜ்யமான ஹிந்துஸ்தானை உருவாக்கக் கத்தித் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதில் முக்கியமான நகர்வுதான் பள்ளிப் பாடத் திட்டங்களில் மாணவர்களின் உள்ளத்தில் நச்சு விதைகளை விதைக்கும் – முகலாய மன்னர்கள்மீதான வெறுப்பைக் கக்கும் ஏற்பாடாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கருத்தியலான மதச் சார்பின்மை, சோசலிஸ்டு என்பனவை நீக்கப்பட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மதச் சார்பின்மையும், சோசலிஸ்டும்தான் நாட்டைக் காக்கும் – இதற்கு மாறானவை மதவெறித் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டு விடும் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!