பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் – அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம்! நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும்!

2 Min Read

அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக!

அரசியல், ஆசிரியர் அறிக்கை, தமிழ்நாடு

பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் &- அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம், நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக என விழைந்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

பா.ஜ.க.வின் தோல்வி பயம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வுக்கு மிகக் கடினமானதொரு நிலை என்று பா.ஜ.க. அரசு வட்டாரமும் – அதிகார மய்யங்களும் உணர்ந்திருப்பதால்  அதன் தோல்வி பயத்தின்காரணமாகவே, வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆட்சி – அமைச்சர்களைத் தம்மிடம் உள்ள ‘திரிசூல’மான சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை முழு வீச்சில் பயன்படுத்தி,   தி.மு.க. போன்ற கட்சிகளை அச்சுறுத்தும் வகையினைக் கையாளத் துவங்கியுள்ளதற்கு எடுத்துக்காட்டுதான் – தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சோதனைகள் ஆகும். அதன் மூலம் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மன உளைச்சல் –  உடல் நலப் பாதிப்பு ஆகியவை அப்பட்டமான மனித உரிமைகள் பாதிப்பும் ஆகும்.

முன்பு 2011-2016இல் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அவர்மீது தனி நபர்களால் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் விசாரணை,  சோதனைகள் என்று இப்போது நடத்த முன் வந்துள்ளது பா.ஜ.க. அரசு.

தி.மு.க. ஆட்சிமீது அவப்பெயரை உருவாக்கும் முயற்சி

அவரும் தொடக்கத்திலிருந்தே அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகக் கூறி, சொன்னபடி ஒத்துழைப்பையும் கொடுத்து வந்த நிலையில், தலைமைச் செயலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபடுவதை – தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் உத்தியாகவே   கருத வேண்டியுள்ளது!

தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்தாலும், அவற்றை சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும், வலிமையும் அதற்கு உண்டு; பல நெருக்கடிகள், அவதூறுகள், வழக்குகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற வரலாறும் அதற்கு உண்டு!

சட்டப் போராட்டங்களானாலும்,  மக்கள் போராட்டமானாலும் இரண்டிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று சோதனைகளிலிருந்து மீண்ட வரலாறும் வலிமையும் தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு! இப்போதும் உண்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை மிகவும் சீர்கேடாகுமளவுக்கு, இப்படி நடப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மனித உரிமைப் பறிப்பும்கூட

நாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடையட்டும்!

மக்களுக்கு எந்த ஆட்சி எப்படிப்பட்டது என்பது தெளிவாகப் புரியும். அவர்கள் பொறுமைக்குப் பதில் கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க வேண்டிய முறையில் கிட்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய  விரும்புகிறோம்.

இத்தகைய நெருப்பாற்றில், நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இந்தப் போராட்டத்திலும் புடம் போட்ட தங்கமாக வெளிவரும்.

ஜனநாயகத்தின் நிரந்தரக் காவலராகத் தன் கடமையைத் தவறாது ஆற்றும்!

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

14.6.2023

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *