30 ஆண்டுகள் மாநிலங்களவையில் முழங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலித்து, அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட சித்தாந்தத்தை மாநிலங்களவை வரலாற்றில் பதிய வைத்ததுபோல் முழங்கியவர். பெருமைக்குரிய ‘திராவிட இயக்கப் ‘போர்வாள்’ வைகோ அவர்கள் ஆவார். மாநிலங்களவையில் இப்போது பிரியா விடை பெற்றார் என்பது – நாடாளுமன்றவாதிகள் அனைவருக்குமே வருத்தமான ஒன்றாகும்.
தமது 30 ஆண்டு நாடாளுமன்ற வரலாற்றில் அவரது முழக்கம் – ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளுக்காகவும், மீனவர்களுக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளுக்காகவும், திராவிடக் கருத்தியலுக்காகவும் ஆற்றிய உரை வீச்சுகள் அரும் பதிவேடுகள் ஆகும்.
அவர் அங்கே சென்று தமது முழக்கத்தை கம்பீரக் குரலை எழச் செய்தவர் தலைவர் கலைஞர் என்பது நினைவுகூற வேண்டியதாகும்.
டில்லியில், அநீதியாகப் பெரியார் மய்யம் கட்டடம் இடிக்கப்பட்ட நேரத்தில், அவர் குரல் கொடுத்து, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றும் கழகத்தின் நன்றிக்குரிய ஒரு மாபெரும் உதவியாகும்.
அவர் குரல் மாநிலங்களவையில் கேட்கவில்லை என்றாலும், மக்கள் மன்றத்தினிடையே, ஓங்கி முழங்கும்! அவர் தொண்டு – நல்ல உடல் நலத்துடன், (உணர்ச்சி வயப்படாமல்) இனியும் தொடரும்.
மக்கள் மன்றம் அவரது தொண்டினை எதிர் நோக்கியிருக்கிறது; பெரியார் மண்ணைக் காத்திடும் இந்த திராவிடப் போர்வாள் என்றும் சுழலும் என்பது உறுதி!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.7.2025