புதுடெல்லி, ஜூலை 24- ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த வாரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர்
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ் தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக் குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை போன்றவை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த விவகாரங்களை நாடாளு மன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச் சினையுடன், பீகாரின் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தையும் முன்வைத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து போர் க்கொடி தூக்கி வருகின்றன.
இதனால் கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
எதிர்க்கட்சிகளின் இந்த நெருக்கடி காரணமாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21-ஆம் தேதி நடந்த மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
அதேநேரம் மாநிலங்களவையில் விவாதிப்பது தொடர்பாக எந்த அறிவிப் பும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று (23.7.2025) நடந்தது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் இந்த விவாதத்தை நடத்த அரசு சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தல்
அதன்படி ஆபரேஷன் சிந்தூர் குறித்து இரு அவைகளி லும் தலா 16 மணி நேரம் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இது மக்களவையில் வருகிற 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் மறுநாளும் நடக்கிறது.
இந்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டதாக கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவர் பிரமோத் திவாரி கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது அரசு கொடுத்த வலுவான பதிலடியை வெளியிடவும், பயங்கர வாத பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் பிரதமர் மோடி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என மூத்த பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
உறுதி அளிக்கவில்லை
அதேநேரம் பிரதமர் மோடி பதிலளிப்பது குறித்து அரசு சார்பில் உறுதி அளிக்கப்படவில்லை என டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
எனினும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி திரும்பி வந்து விவாதத்தில் பங்கேற்கும் வகையிலேயே இந்த விவாதத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த விவாதத்தில் பங்கேற்று பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.