பீஜிங், ஜூலை 24- சீன ராணுவ வீரர்கள், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் இறந்தனர். பதிலடி தாக்குதலில் ஏராளமான சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இதையடுத்து பள்ளத்தாக்கு பகுதிகளில் இருநாடுகளும் படைகளை குவித்ததால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
சுற்றுலா விசா
பின்னர் எல்லைகளில் இருந்து படைகளை விலக்க இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின்பு, சீனா படைகளை திரும்பப் பெற சம்மதித்தது. கொஞ்சம் கொஞ்சமாக படைகள் திரும்பப்பெறப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபருடன் படைகள் முற் றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே 2020இல் கரோனா தொற்று காரணமாக சீனாவில் இருந்து பயணிகள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சுற்றுலா விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
எல்லை போர்ப்பதற்றம் மற்றும் கரோனா அபாயம் தணிக்கப்பட்ட பின்பு இருதரப்பு உறவுகளை சரிசெய்ய இந்தியாவும், சீனாவும் கடந்த சில மாதங்களாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 14-15ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றிருந்தார். அப்போது இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து இயல்பாக்குவது அவசியம் என்று இருநாட்டு அதிகாரிகளும் முடிவு செய்தனர். அதன்படி விசா வழங்க முடிவு செய்யப்பட் டது.
இந்த நிலையில் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், இன்று (24.7.2025) முதல் சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வர சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவித்து இருக்கிறது.
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தில் சாதனை – வளர்ச்சி
சியோல், ஜூலை 24- உலகின் மிக நீண்ட ஆயுட்காலம் மற்றும் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்ட நாடான தென் கொரியாவில், இந்த ஆண்டின் முதல் அய்ந்து மாதங்களில் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது
இது, மக்கள்தொகை நிலையாக இருப்பதை உறுதிசெய்யவும், பெண்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வரும் அந்நாட்டு அரசுக்கு ஒரு நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்.
ஜனவரி முதல் மே வரை பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6.9 விழுக்காடு அதிகரித்து சுமார் 106,000 ஆக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 8,300 அல்லது 3.6 விழுக்காடு அதிகரித்து 238,300 ஆக உயர்ந்துள்ளது.
“முப்பது வயதின் தொடக்கத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒட்டுமொத்தமாக திருமணங்களின் எண்ணிக்கை கூடியது, அதனால் பிறப்பு விகிதமும் உயர்ந்துள்ளது,” என்று கைரோ ஸ்டாடிஸ்டிக்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தென் கொரியாவின் மக்கள்தொகை சவால்களுக்கு மத்தியில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் குறிக்கிறது.
அரசு திரைப்படக் கல்லூரியில் சேர
இட ஒதுக்கீடு பிரிவு இடங்களுக்கு
வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 24- அரசு திரைப் படக்கல்லூரியில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு தகுதியான மாணவ, மாணவிகள் ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுப் பிரிவு
இது தொடர்பாக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் எம்.மேகவர்ணம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை தரமணியில் உள்ள அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியேட், ஒலிப்பதிவு. எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன.
நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழி உள்ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் ஒருசில இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
எந்தெந்த பாடப்பிரிவுகளில் எந்தெந்த இடஒதுக்கீட்டு பிரிவில் எத்தனை காலியிடங்கள் உள்ளன? என்ற விவரத்தையும், கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட இதர விவரங்களையும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் தாய் அல்லது தந்தை திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் என்பதற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்திடமிருந்து (SIFCC) பெற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.