காசா, ஜூலை 24- இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசாவில் பசி-பட்டினிக்கு ஒரேநாளில் 15 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இசை நிகழ்ச்சிக்கு நடுவே நடந்த இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் தாக்குதல் தொடங்கியது. இதில் காசாமுனையை சேர்ந்த 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்தனர். போர் தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடுமையான பஞ்சம்
பயங்கர ஆயுதங்கள், ஏவுகணைகள், நவீன பாதுகாப்பு தளவாடங்களை தாண்டி இஸ்ரேல் ராணுவம் காசா முனை மீது உளவியல் ரீதியான தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகள், மனிதநேய உதவி மய்யங்கள், உணவு சத்திரங்கள் ஆகியவற்றை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ராக்கெட் குண்டுகளை வீசியெறிந்து தாக்குதல் நடத்துகின்றன.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் மனிதாபினமான உதவிகள் பெறுவதை தடுத்து வருகிறது. இதனால் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அங்குள்ள பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கடுமையான பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒரேநாளில்…
இந்தநிலையில் காசாவில் நேற்று (23.7.2025) ஒரேநாளில் பசி மற்றும் பட்டினி காரணமாக 15 பேர் உயிரிழந்ததாக அந்த பகுதியின் மருத்துவ அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவின் இயக்குனர் முகமது அபு சால்மியா பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “காசாவில் மோதல் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதே நேரத்தில் உதவி முகாம்களை அணுக முயற்சிப்பவர்களை குறிவைத்து இஸ்ரேலால் தாக்குதல் நடத்தப்படுகிறது. பசி மற்றும் பட்டினி காரணமாக ஒரே நாளில் 6 மாத பச்சிளம் குழந்தை உள்பட 15 பேர் உயிரிழந்தனர்” என்றார்.