வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல்முறையீட்டு வழக்கு விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 24- நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் குற்றவாளி எனக் கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விசாரணையிலிருந்து விலகுவதாக தலைமை நீதிபதி கவாய் அறிவித்து உள்ளார்.

மேல்முறையீட்டு வழக்கு

நீதிபதி வர்மாவின் மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு நேற்று (23.7.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வர்மாவுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிடுகையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்.

இதில் பல அரசியல மைப்பு கேள்விகள் அடங்கியுள்ளன என்பதை சுட்டிக் காட்டினார். கபில் சிபலைத் தவிர, மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி மற்றும் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா உள்ளிட்ட வழக்குரைஞர்கள் குழுவும் நீதிபதி வர்மாவுக்காக ஆஜராகி வருகின்றனர்.

சிறப்பு அமர்வை அமைக்க முடியு

கபில் சிபலின் வாதத்தை தொடர்ந்து தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், “எனக்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவுடன் ஏற்கெனவே நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு தொடர்பாக நான் கலந்துரையாடி உள்ளேன். அவரை பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்துள்ளேன். எனவே, இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியான முடிவாக இருக்காது. அது முறையற்றதும் கூட. நாங்கள் ஒருமனதாக கூடி பேசி ஒரு சிறப்பு அமர்வு ஒன்றை அமைப்போம்” என்றார். இதையடுத்து, நீதிபதி வர்மா மேல்முறையீட்டு வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் ஒரு சிறப்பு அமர்வை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர் நீதிபதியின் வீட்டிலிருந்து பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றினர்.

இந்த விவகாரத்தில் நீதிபதி வர்மா குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவருக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கையை தொடங்குமாறு நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இந்த நிலையில், இதற்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நீதிபதி வர்மா நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *