குவாலியர், ஜூலை 23 மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று சென்றது.
அந்த கார் திடீரென பக்தர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இதனால், மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அனைவரும் சிதாவ்னா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுபற்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறும்போது, மொத்தம் 13 பேர் புனித யாத்திரை சென்றபோது, பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியது என தெரிவித்தனர். சாலையோரம் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்று விரைவாக வந்துள்ளது. அதன் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் இவர்கள் மீது மோதியுள்ளது. இதில், 4 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.