அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் பேசுவதையும், பிஜேபியின் அமித்ஷா உள்ளிட்ட தள(ர்)பதிகள் பேசுவதையும் பார்த்தால் ‘பலே பலே!’ ஓர் அருமையான நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பதை ‘இரசிக்க’ முடிகிறது.
ஏதோ 2026 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது போலவும், அதில் அமைச்சரவையில் பிஜேபிக்கு இடம் உண்டா, இல்லையா? என்பது தான் ஒரு பிரச்சினை என்பது போலவும் ஒரு தோற்றத்தை உண்டாக்கும் கபட நாடகம்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல நகைச்சுவை நாடகம்தான் – ஆனால் இது கற்பனையின் உச்சமாகும்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அக்கட்சி சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. கட்சிக்குள் யாருக்குப் பதவி என்ற சண்டை வீதிக்கு வந்தது – கட்சிக்காரர்கள் மத்தியிலும் ஒரு சோர்வு, பொது வெளியிலும் ‘என்ன இப்படி ஆகி விட்டதே அதிமுக!’ என்ற விமர்சனமும்தான் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
திரு. அன்வர் ராஜா என்ற – தொடக்கக் காலத்திலிருந்தே அதிமுகவின் உறுப்பினராக இருந்தவர் – ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர் – நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் – உள்ளாட்சி நகர மன்ற தலைவராகவும் இருந்தவர் – அவர் அதிமுகவை விட்டு விலகி, திமுகவுடன் இணைந்துள்ளார் என்றால், ஆம், இது அதிமுகவுக்கான எச்சரிக்கைக் குறி! பிஜேபி ஆலிங்கனத்தில் அதிமுக அழியப் போகிறது என்ற அபாய அறிவிப்பிற்கான அடையாளம்!
சில மாதங்களுக்கு முன் வரை பிஜேபியோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குன்றின்மீது ஏறி நின்று உரக்கக் குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்ன ஆனது? என்ற கேள்வி அவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது.
எந்த முகத்தைக் கொண்டு பிஜேபி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்பார் திரு. எடப்பாடி பழனிசாமி?
‘கழகங்கள் இல்லாத ஆட்சி அமைப்போம்’ என்று பிஜேபியின் முக்கிய தலைகள் முழங்கியது எல்லாம் மறந்து விட்டதா? ‘நாங்கள் கழகத்தைச் சேர்ந்த அமைப்பு இல்லை’ என்று ஒரு வேளை அறிவிக்கப் போகிறார்களா?
‘பிஜேபியோடு ஜெயலலிதா கூட்டணி வைக்கவில்லையா?’ என்று எதிர் கேள்வி கேட்பதில் நியாயம் உண்டு; அதே நேரத்தில் அந்தக் கூட்டணியில் யார் கை உயர்ந்திருந்தது – யார் கை தாழ்ந்திருந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? பிஜேபி ஆட்சியைக் கவிழ்த்ததும் ஜெயலலிதாவே!
இப்பொழுது என்ன நடக்கிறது? பிஜேபி நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடும் கட்சியாகி விட்டதே அ.தி.மு.க.
வேளாண் சட்டமாக இருந்தாலும் சரி, குடியுரிமைத் திருத்த சட்டமாக இருந்தாலும் சரி, யூனிபார்ம் சிவில் கோடாக இருந்தாலும் சரி, உதய் மின் திட்டமாக இருந்தாலும் சரி, ஒன்றிய பிஜேபி அரசின் இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் கை தூக்கியவர்கள் யார்?
இந்த நிலை ஏற்பட்ட பிறகு, பிஜேபி அதிமுகவை எப்படி எடை போடும்? எந்த இடத்தில் அக்கட்சியை நிறுத்தி வைக்கும்?
யாருக்கு தெரியாமல் டில்லிக்குச் சென்று, வேறுவேறு வாகனங் களில் மாறிமாறிப் பயணித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோதே – மக்களுக்குப் புரிந்து விட்டதே! இந்த சந்திப்பின் பின்னணியில் ஏதோ ஒரு ’சுயநலம்’ பதுங்கி இருக்கிறது என்பது பேசு பொருளாகி விட்டதே!
பிஜேபியோடு கூட்டணி என்ற அறிவிப்பு வெளிவந்த அந்த நொடியிலேயே, கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துகளாகி விட்டது – வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று. பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதி ஏழைக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சமூக நீதியின் அடிப்படைக்கே வேட்டு வைத்தது ஒன்றிய பிஜேபி அரசு.
ஒரு செய்தி தெரியுமா திரு. எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியினருக்கும்? புரட்சித் தலைவர் என்று இன்று வரை அவர்கள் புகழும் எம்.ஜி.ஆர். இருந்தபோதே 1980 ஜனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் அதிமுக தோற்றதே – நினைவு இருக்கிறதா?
என்ன காரணம்? பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு (ஆண்டு வருமானம் ரூபாய் 9000 இருந்தால் – பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது) என்று அறிவித்த காரணத்தால் (G.O.MS No.1156 – நாள்: 2.7.1984 சமூக நலத்துறை) தானே எம்.ஜி.ஆர். இருக்கும்போதே அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டதை மறக்கலாமா?
இன்று ஒன்றிய பிஜேபி அரசு உயர் ஜாதியினருக்கு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்குப் பெரும் பலன்கிட்டும் வகையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் என்று அவசர அவசரமாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்பாட்டுக்கும் வந்து விட்டதே!
எம்.ஜி.ஆர். அவர்களும் கொண்டு வந்த அந்த வருமான வரம்பு இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் கோடை இடி போல் இடித்து, அடை மழைபோல் பிரச்சாரம் – தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் போராட்டம் தானே! அந்த ஆணையைப் பின் வாங்கச் செய்தது. அதனை முதலமைச்சர் எம்.ஜி.ஆரே ஒப்புக் கொண்டது உண்டே!
என்ன செய்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்? தோல்வியைத் தொடர்ந்து வருமான வரம்பு ஆணையை வாபஸ் பெற்று அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 விழுக்காடு இடஒதுக்கீடு என்று இருந்ததை 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கவில்லையா?
இந்த வரலாறு எல்லாம் திரு. எடப்பாடிக்கு எங்கே தெரியப் போகிறது என்று கேட்கலாம்; அவருக்குத் தெரியாது என்பதற்காக ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படை யிலான இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த முடியுமா?
‘மாநில சுயாட்சிக்காக இராணுவத்தைச் சந்திக்கத் தயார்!’ என்றார் திமுக மாநாட்டில் திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்.
அந்த எம்.ஜி.ஆர். வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் இன்றைய அதிமுக மாநில சுயாட்சி என்ற சொல்லை உச்சரிக்கக்கூட உதட்டை அசைக்க அச்சப்படுகிறதே!
எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிக் கட்சியாக இருக்கக் கூடாது; ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டை எந்தெந்த வகைகளில் எல்லாம் வஞ்சித்து வருகிறது என்பது திராவிட மண்ணின் பச்சைப் பாலகனுக்கும் தெரிந்த ஒன்று! இந்த இடத்தில் கட்சிக் கண்ணோட்டத்தை தூர ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து ஓர் இழை அளவுக்கும் குரல் கொடுத்திருந்தால்கூட, அதிமுகவுக்குத் தமிழ்நாட்டு நலனில் அக்கறை இருக்கத்தான் செய்கிறது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு, அதிமுகவின் மரியாதையை உயர்த்தி இருக்குமே!
இலட்சியமாவது மண்ணாங்கட்டியாவது – தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – முதலமைச்சர் நாற்காலியில் அவர் மட்டும் அமர வேண்டும் என்பதுதான் ஒற்றைக் குறிக்கோள் என்று அதிமுக நினைக்குமேயானால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதிமுக தனக்குத்தானே குழியைத் தோண்டிக் கொள்கிறது என்பது உறுதியாகும். பிஜேபிக்கோ, சங்பரிவார்க் கூட்டத்திற்கோ தமிழ்நாட்டில் என்ன மரியாதை, செல்வாக்கு என்று நன்கு தெரிந்திருந்தும் அதிமுக – பிஜேபி கூட்டணி உருவானால் அது தோல்விக்கான உறுதிப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட ஒன்றே!
தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில், ஏதோ அதிமுக – பிஜேபி கூட்டணி வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்பது போலவும், அது கூட்டணி அரசா அல்லது அதிமுகவின் தனி ஆட்சியாக இருக்குமா என்பதுதான் பிரச்சினை – என்பதைப் பேசு பொருளாக்கி ஜிகினா வேலை காட்டுவது ஒரு திட்டமிட்ட பகட்டு நாடகமே!
பந்தியிலேயே இடமில்லை இலை பொத்தல் என்று கூறிய எடப்பாடியாரின் கூற்று அவருக்கே பொருந்துமே!
சுயமரியாதை இயக்கத்தில் நூற்றாண்டுக் கால கட்டம் இது! தமிழ்நாடு சூறாவளியாகச் சுழன்று எழுந்து பாசிச பா.ஜ.க.வையும் அதனோடு கை கோர்க்கும் அதிமுகவையும், மண்ணும், மண்ணடி வேரும் இல்லாமல் வீழ்த்தும் – வீழ்த்தியே தீரும் என்பதை இன்றே சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் நாட் குறிப்பில் தேதி போட்டு எழுதி வைத்துக் கொள்ளலாம்; கையொப்பமும் போட்டு வைத்துக் கொள்ளலாம்!