புதுல்லி, ஜூலை 23- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வந்தார். தமிழக அரசுக்கு எதிரான இந்த நடவடிக்கை ஆளும்கட்சிக்கு பெரும்தலைவலியாக இருந்தது. இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
அதன்படி சட்டபேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும். மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்துக்குள்ளும், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத்தலைவர் 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது.
காலக்கெடு
மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவின் கீழ், ஆளுநருக்கு தனியுரிமை கிடையாது என்றும், அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில் ஆளுநர் செயல்பட வேண்டும் என் றும் கூறியது.
ஆளுநர் அனுப்பிவைத்த மசோதா மீது குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டால், மாநில அரசுகள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘மசோதா மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது இதுவே முதல்முறை ஆகும்.
14 கேள்விகள்
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் குடியரசுத்தலைவர் 14 கேள்விகளை எழுப்பி அனுப்பிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி . பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி. எஸ்.நரசிம்மா, அதுல் எஸ். சந்துருக்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரித்தது.
சட்டரீதியான குறைபாடு
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், ‘குடியரசுத்தலைவரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது’ என வாதிட்டார். மற்றொரு மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், ‘இந்த வாதத்தை விசாரணையின்போது முன்வைப்போம்’ என்றார்.
கேரள அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால் ஆஜராகி, ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்ற கோணத்தில் வாதங்கள் முன் வைக்கப் படும்’ என்றார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, ‘ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான தாவாவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ள விசாரணை அதிகாரத்தின் அடிப்படையில் இந்த குடியரசுத்தலைவரின் ஆலோசனை கேள்விகளை குறிப்பாக மாநில சட்டமன்றத்துக்கும், ஆளுநருக்கும் உள்ள தாவாவை விசாரிப்பதில் சட்டரீதியான குறைபாடு உள்ளது’ என வாதிட்டார்.
தமிழ்நாட்டு நலனை பாதிக்கும்
மீண்டும் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், ‘குடியரசுத்தலைவரின் ஆலோசனை கேள்விகள் தொடர்பான விசாரணை தமிழ்நாட்டின் நலன்களை பாதிக்கும்’ என வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்கள் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களின் நலன்களும் அடங்கியுள்ளதால் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் கேட்க வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, ‘இந்த விவகாரம் ஒரு மாநிலம் சார்ந்தது மட்டுமல்ல அனைத்து மாநிலங்களையும் தொடர்புடையது’ என வாதிட்டார்.
ஒன்றிய, மாநில அரசுகள் பதில்
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஒரு வாரத்துக்குள் அதாவது வருகிற 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிடுகிறோம்.
வாதங்களை முன்வைப்பது குறித்து காலநிர்ணயத்துக்காக 29ஆம் தேதி மீண்டும் பட்டியலிடப்படும். வாதங்கள் ஆகஸ்டு 2ஆவது வாரத்தில் தொடங்கும் என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டனர்.