புதுடில்லி, ஜூலை 23- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக, மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தத்தார், பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது. இதன்மூலம் வழக்குரைஞர் தொழிலின் சுதந்திரத்தின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்கை எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தலைமை நீதிபதி கூறியதாவது:-
வழக்குரைஞருக்கும், அவரது கட்சிக்காரருக்கும் இடையிலான தகவல் தொடர்பு சிறப்பு சலுகை பெற்ற தகவல் தொடர்பு அது தவறாக இருந்தாலும், வழக்குரைஞர்களுக்கு எதிராக எப்படி அழைப்பாணை அறிவிக்கை அனுப்ப முடியும்? அமலாக்கத்துறை அனைத்து எல்லைகளையும் மீறி வருகிறது. இது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது “அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை நாங்கள் பல வழக்குகளில் பார்த்துள்ளோம். நாங்கள் செய்திகளோ, யூடியூப் நேர்காணல்களோ பார்ப்பதில்லை. கடந்த வாரம்தான் சில திரைப்படங்களை பார்த்தேன்” என்று கூறினார்.
தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அமலாக்கத்துறை வேண்டுமென்றே மேல்முறையீடு செய்வதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.