வாசிங்டன், ஜூலை 23- அமெரிக்காவின் மேனாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்து சிறையிலடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவை, தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சிப் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒபாமாவை கைது செய்யும் காட்சிப் பதிவு
‘யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது’ என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்த காட்சிப் பதிவில், மேனாள் அதிபர்களான பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் இந்த வாக்கியத்தை பேசுகின்றனர். ஒரு கட்டத்தில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலேயே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஒபாமாவுக்கு கைவிலங்கிடுவது போலவும், அதைப் பார்த்து அதிபர் டிரம்ப் சிரிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, கைதிகளுக்கான ஆரஞ்சு நிற உடையில் ஒபாமா சிறையில் இருப்பது போலவும் அந்த காட்சிப் பதிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், ஒபாமாவை “மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர்” என்று டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், 2016 தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதைத் தடுக்க, ஒபாமா மோசடி வழிகளைக் கையாண்டதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட் புகார் கூறியிருந்தார்.
ஒபாமா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசியலுக்காக உளவுத்துறையை பயன்படுத்தியதாகவும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஒபாமாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் துளசி கபார்ட் குற்றஞ் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாகவே, பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற இந்த ஏ.அய். காட்சிப் பதிவை டொனால்டு டிரம்ப் பகிர்ந்துள்ளார். டிரம்பின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்து வருகின்றனர்.