அப்டாபாத், ஜூலை 23- பாகிஸ் தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பழங்குடி சமூகப் பஞ்சாயத்தில், குடும்ப விருப்பத்திற்கு எதிராகத் திருமணம் செய்துகொண்ட இணையரைக் கொல்ல உத்தரவிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொலி ஒன்று, அலங்கரிக்கப்பட்ட நிலையில் வண்டியில் அழைத்து வரப்பட்ட ஒரு பெண் சுட்டுக் கொல்லப்படுவதைக் காட்டுகிறது. அவர் கீழே விழுந்தபோது, அவரது கணவரின் உடலும் அருகிலேயே கிடந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இருவரின் சடலங்களும் கட்டி எரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான செயல், “கவுரவக் கொலைகள்” என்ற பெயரில் பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமை மீறல்களை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் குறைந்தது 405 கவுரவக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும்பாலானோர் பெண்களே ஆவர்.
இச்சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் இதில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தச் சம்பவம் பாகிஸ்தான் சமூகத்தில் நிலவும் பழைமைவாதப் போக்குகளையும், சட்டத்திற்குப் புறம்பான பஞ்சாயத்துகளின் அதிகாரத்தையும் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது.