புதுடில்லி, ஜூலை 23- தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கை அரசு தரப்பால் அதிகாரப்பூர்வமாக மதிப்பாய்வு செய்யப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா, மேலும் தொல்லியல் ஆய்வாளரை மீண்டும் மீண்டும் மாற்றுவதற்கான காரணம் என்ன என்பன போன்ற கேள்விகளை அவர் முன்வைத்தார்.
கீழடி அகழாய்வு அறிக்கை
இதற்கு ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அவரது பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய தொல்லியல் ஆய்வு மய்யத்தின் (ASI) ஆய்வாளர்களால் நடத்தப்படும் அகழாய்வுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் அகழாய்வுகளுக்குத் தலைமை தாங்கியிருக்கலாம்.
அகழாய்வின் அறிக்கையை முன்னணி தொல்லியல் ஆய்வாளர் சமர்ப்பிக்கிறார். இது ஏஎஸ்அய் (ASI) வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டு, முறையாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படுகிறது.
கீழடி அகழாய்வு ஏஎஸ்அய் (ASI) மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னணி தொல்லியல் ஆய்வாளரின் அறிக்கை தற்போது மதிப்பாய்வில் உள்ளது.
வல்லுநர்களின் கருத்துகள் முன்னணி தொல்லியல் ஆய்வாளருடன் பகிரப்பட்டுள்ளன, அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையை நிராகரிக்கும் நடைமுறை இல்லை.
தொல்லியல் அதிகாரிகளுக்குப் பணிகளை ஒதுக்குவது ஒரு வழக்கமான நிர்வாகக் காரணம். நாட்டில் அகழாய்வுகள் “பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958” மற்றும் “1959 விதிகள்” படி நடத்தப்படுகின்றன.
கீழடி அகழாய்வின் அடிப்படையில் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கு, சட்டம் மற்றும் உரிய அறிவியல் செயல்முறையைப் பின்பற்ற ஏஎஸ்அய் (ASI) முழுமையாக உறுதியாக உள்ளது.
தற்போதைய நிலையில் கீழடி அகழாய்வை தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வருகிறது.