மணிலா, ஜூலை 23- பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ளூர் வானொலியில் ஊடக வியலாளராக பணி புரியும் எர்வின் லபிதாட் செகோவியா என்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், பிலிப்பைன்ஸில் ஊடகவியலாளர்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மீண்டும் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
தனியார் வானொலியில் சமூக விவகாரங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் குறித்த விமர்சன செய்திகளை ஆய்வு செய்து தொகுத்துவழங்கும் எர்வின் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் எர்வினை நோக்கி தங்களது கைத்துப்பாக்கியால் சுட்டனர். இதில் எர்வின் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தார்.
செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்றாகக் கருதப்படுகிறது. Committee to Protect Journalists என்ற அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பற்ற இடங்களில் பிலிப்பீன்ஸை 9ஆவது இடத்தில் பட்டியலிட்டிருந்தது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர். இச்சம்பவம், பிலிப்பைன்ஸில் ஊடக சுதந்திரத்திற்கும், ஊடகவியலாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதைக் காட்டுகிறது.