மதுரை, ஜூலை 23- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் சிறீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஅய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் அலைபேசி கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19இல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி அலைபேசி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகன் இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் இருவரையும் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தந்தை, மகன் மரணம் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, சிபிஅய்-க்கு மாற்றியது. இதையடுத்து, சிபிஅய் வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சிறீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 பேரை கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட சிபிஅய் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரு கட்டங்களாக 2,427 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை யை சிபிஅய் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சிறீதர் உட்பட 9 பேர் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துகுமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் சிறீதர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசுக்கும், காவல் துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன்.
அப்ரூவராக மாறி இந்த வழக்கில் காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு சிபிஅய் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் விரைவாக விசாரிக்கப்படும்
உயர் நீதிமன்றத்தில்
தேர்தல் ஆணையம் பதில் மனு
சென்னை, ஜூலை 23- இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காணப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்து உள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மனுதாரர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக பெங்களூரு வா.புகழேந்தி, சூர்யமூர்த்தி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி, வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிமுக தொடர்பான இந்த விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் காலக்கெடு நிர்ணயம் செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்பதற்கான காலவரம்பை நிர்ணயம் செய்து எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (22.7.2025) நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடரபாக இதுவரை 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, எழுத்துப்பூர்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இயற்கை நீதியின் அடிப்படையில் புகார் அளித்த மனுதாரர்களுக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். தொடக்ககட்ட விசாரணை நடத்தி முடித்தபிறகு இந்த பிரச்சினை தொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும்.
பீஹார் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை நடத்த கால வரம்பு நிர்ணயிக்க அவசியம் இல்லை. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புகார் மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காணப்படும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (ஜூலை 22) தள்ளி வைத்துள்ளனர்.