மதவெறியின் அடையாளம் தான் திருஷ்டி பொம்மைகள்!

2 Min Read

கண் திருஷ்டிக்கு வைக்கப்படும் படங்களும், பூசணிக்காயும், திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுக்கும் வழக்கமும் எதை உணர்த்துகின்றன என்பதைப் பண்பாட்டு வரலாற்று ரீதியாக உணர்த்துகிறார் எழுத்தாளர் சூர்யா சேவியர்.]

ஆசீகவகம், பவுத்தம், சமணம் ஆகிய மதங்களே தமிழ் மண்ணில் கி.பி.7 ஆம் நூற்றாண்டு வரை செழித்து இருந்தன. பவுத்த மதத்தவர் அரசுக்கு வழிகாட்டுபவர்களாகவும், சமண மதத்தினர் குகைகளில் வாழ்ந்து அறம் உரைப்பவர்களாகவும் இருந்தனர். பவுத்தம், சமணத்தைக் கைவிட்டு கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் எழுந்தது. சமணத்திலிருந்த திருநாவுக்கரசர் சைவத்திற்கு மாறினார் என்பது அறிந்த வரலாறு.

ஆசீவகர், பவுத்தர், சமணர் தங்கள் மதங்களைக் காக்கும் பொருட்டுப் போராடினார்கள். பவுத்த விஹார்களையும், சமணப் பள்ளிகளையும் பார்ப்பனியம் தனதாக்கிக் கொண்டது.

ஆசீவகர்களும், சமணர்களும் கழுவேற்றம் செய்யப்பட்டார்கள். இன்றைய கோவில் கோபுரங்களில் கழுவேற்றக் காட்சிகள் சிற்பங்களாக இருப்பதைக் காணலாம். (படம் இணைப்பு: திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்தில் ஆசீவகர்கள் கழுவேற்றப்பட்ட காட்சிகள்)

மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற வரலாறும் படித்திருப்பீர்கள். எண்ணாயிரம் பேர் என்றும், எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்த சமணர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.

இதே போல் பவுத்த பிக்குக்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழ்நாட்டில் புத்தரின் சிலைகள் பெரும்பாலான இடங்களில் தலை இல்லாமல் இருப்பதையும் நாம் அறிவோம். மன்னர்களுக்கு மந்திரம் சொல்லிக் கொடுத்த பார்ப்பனர்களின் துணையோடு தான் இக்கொடூரங்கள் அரங்கேறின.

வெட்டிக் கொல்லப்பட்ட பவுத்த பிக்குகளின் தலையை ஒரு தட்டில் வைத்தனர். அதற்குப் பரிசுகளும் மன்னர்களால் வழங்கப்பட்டன. வெட்டப்பட்ட தலைகளோடு, பவுத்த விஹார்களைக்  கோவில்களாக மாற்றினர். அப்போது ஏற்ெகனவே இருந்த வழிபாட்டு முறைகளுடன் சேர்த்து, புத்தர்,மகாவீரர் போன்றோரை மிகவும் மோசமாக திட்டிப் பாடினர். இப்பாடல்களை இப்போதும் கேட்கலாம்.

இப்பாடல்களுக்கு கேரளத்தில் பூரப்பாட்டு என்று பெயர். கேரளத்தில் இதற்கான தனி விழாவே நடக்கிறது. இதற்கு தாலப்பொலி என்று பெயர். பொலி கொடுத்திருவேன் என்பது இதுதான். பொலி போட்டிருவேன் என்று இங்கு சொல்வார்கள்.

காவு தீண்டுதல் என்பதும் பவுத்த விஹார் மற்றும் சமணப் பள்ளிகளைக் கைப்பற்றிய பார்ப்பனர்களின் நினைவுகள் தான். தமிழில் ஏசல் பாடல்கள் என்ற வடிவத்தில் இருக்கிறது.

தாம்பூலத்தில் ரத்த நிறம் போல வரவைத்து ஆரத்தி எடுப்பதும், அதில் பணம் போடுவதும், பவுத்த பிக்குகளின் தலையை வெட்டி ரத்தத்தோடு வைத்து, பார்ப்பனர்களையும், மன்னர்களையும் வரவேற்றுப் பரிசு பெற்றதிலிருந்து உருவானது தான்.

பவுத்தத் தலை வெட்டப்பட்டால் வைணவக் குறியீடும், சமணர்கள் தலை வெட்டப்பட்டால் சைவக் குறியீடும் இடப்பட்டது. அக்கொடூரமே கண் திருஷ்டி என்று கதை அளக்கப்பட்டது. பவுத்தம் என்பதைப் பூதமாகக் காட்டினர்.

உங்கள் வீட்டிலும் கூட இதை வைக்காதீர்கள். ஏனெனில் அவை வர்ண மற்றும் வர்க்க ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட, இம்மண்ணில் அறம் உரைத்த நம் முன்னோர்களின் தலைகளே!

– எழுத்தாளர் சூர்யா சேவியர்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *