‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’
‘‘எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம். பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஒரு பெண் முன்னேறும்போது, ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறுகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
– மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ். தலைவர்
‘தினமலர்’ 19.7.2025
ஆரியத்தைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகக் கூறினார். ‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’’ என்ற வாசகம் எவ்வளவுத் துல்லியமானது – நூறு விழுக்காடு சரியானது என்பதற்கு ஆர்.எஸ்.எஸின் தலைவர் (சர்சங்சாலக்) திருவாளர் மோகன் பாகவத் ஒருவர் போதும்.
இப்பொழுது பெண்களைப்பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசும் இதே மோகன் பாகவத் பெண்களைப்பற்றி என்னென்னவெல்லாம் சொன்னார்?
கல்வி அதன் மூலம், செல்வமும் பெருகும்போது பெண்களிடம் ஆணவம் வருகிறது – ஆர்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் – 16.02.2020
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
‘இப்போதெல்லாம் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள் அற்பத்தனமான பிரச்சினைகளுக்கெல்லாம் போராடுகிறார்கள். படித்த மற்றும் வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன. காரணம் பெண்களிடம் கல்வியும், செல்வமும் பெருகும்போது அவர்களிடம் ஆணவம் வருகிறது. இதன் விளைவாக குடும்பங்கள் வீழ்ச்சியடைகின்றன.
இந்தூரில் மோகன் பாகவத் பேசியது என்ன? (06.01.2023)
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பெண்கள் வீட்டு வேலைகளுக்கே தங்கள் வாழ்நாளை ஒதுக்க வேண்டும் என்றும், கணவர்களின் பணி குடும்பத்திற்காக உழைத்து வருவாய் ஈட்டுவதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் “கணவன்-மனைவி ஒரு சமூக ஒப்பந்தத்தில் பங்கேற்கின்றனர். மனைவி வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், கணவரின் உறவினர்களின் மனம் கோணாதபடி நடக்கவேண்டும், அதே போல் கணவன் அவளது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இது ஒரு ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தை மனைவி மீறினால் கணவன் அவளை விலக்கலாம்” என அவர் கூறினார்.
அசாம் மாநிலம் சிர்ஷாவில் மோகன் பாகவத் பேசியது – 07.12.2012
அசாமின் சில்சரில் நடந்த கூட்டத்தில், “பாலியல் வன்முறைகள் நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன; கிராமங்களில் இல்லை. காரணம் பெண்கள் படித்துவிட்டு தாமதமாக வீட்டிற்கு வருகின்றனர். இதனால் பெண்கள் தவறான நபர்களின் பார்வையில் பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால் கிராமங்களில் அப்படி அல்ல, கிராமங்களில் பெண்கள் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனர்’’ எனப் பாகவத் கூறியிருந்தார்.
இப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்தி மட்டம் தட்டிப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் தான், இப்பொழுது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம், ஒரு பெண் முன்னேறும்போது ஒரு சமுதாயம் முன்னேறுகிறது என்று கசிந்துருகிப் பேசுகிறார்.
வெகு நாள் வரை பெண்களை ஆர்.எஸ்.எஸில் சேர்ப்பதே கிடையாது. தப்பித் தவறி, தமது உழைப்பால் தனித் தன்மையைக் காட்டி வரும் உமாபாரதி போன்ற பெண்கள் இப்பொழுது எங்கே போனார்கள்? அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை!
மத்தியப் பிரதேசத்தில் அவருக்குக் கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே!
இவர்கள் வலியுறுத்தும் ஹிந்து ராஜ்ஜியத்தின் அடிப்படை ஆணி வேர்களான நான்கு சுருதிகளும் (வேதங்களும்), பதினெட்டு ஸ்மிருதிகளும் பெண்களை எப்படி எல்லாம் இழிவுபடுத்துகின்றன?
எழுதுவதற்கே கைகள் நடுங்குகின்றன! குறிப்பாக மனு தர்ம சாஸ்திரம் ஒன்பதாவது அத்தியாயம் 19ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
‘‘மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன’’ என்கிற மனுதர்மத்தை இன்று வரை தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் தலைவர் மோகன் பாகவத் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்தால் கண்டவனோடு ஓடி விடுவாள் என்று சொன்னதை அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் விலாவாரியாகப் பதிவு செய்துள்ளாரே!
அடுத்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமம் என்றும், வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்றும் கூறவில்லையா?
இவர்களை தங்களின் உதாரணப் புருஷர்களாகத் தூக்கி சுமக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திடீர் ஞானோதயம் உதித்ததுபோல பெண்களைப் போற்றிப் பேசுகிறார் என்றால், அதை நம்பிட இன்றைய பெண்கள் தயாராக இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்!