புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடு பட்டு வருவதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பாதுகாப்புத் துறை அமைச்சரை பேச அனுமதிக்கிறார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர். அவையில் பேசுவது என்னுடைய உரிமை. ஆனால், என்னைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதித்தால்தானே விவாதம் நடைபெறும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “மக்களவையில் பாஜக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஒரு புதிய அணுகுமுறை. அரசு தரப்பில் உள்ளவர்கள் பேச முடிந்தால், எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு, நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட
மொழிகளில் நாடாளுமன்ற அலுவல் பட்டியல்
புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தில் முன்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே பேச முடிந்தது. பின்னர் பல மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகளுக்கு பிறகு பிராந்திய மொழிகளில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைப்போல மொழிபெயர்ப்பு வசதியும் முன்பு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு முதல் இது அனைத்து மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று (21.7.2025) முதல் மக்களவை அலுவல் பட்டியலும் தமிழ் உள்ளிட்ட பிராந் திய மொழிகளில் வெளியானது. தற்போது ஆங்கி லம், ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலை யாளம், குஜராத்தி உள்பட 10 மொழிகளில் கிடைக்கிறது.
மும்மொழிக் கொள்கை அமல்
மாநில அரசுகளே முடிவு செய்யலாம்!
வழிக்கு வந்தது பிஜேபி
புதுடில்லி, ஜூலை 22 தேசிய கல்விக் கொள் கையின் முக்கிய அம்சமான மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே நெகிழ்வான முறையில் முடிவு செய்துகொள்ளலாம் என ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மக்களவையில் காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அதில், கல்வி என்பது ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளதால், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மாநிலத்தின் தேவைகள் மற்றும் பன்முகத்தன்மையைக் கருத்தில்கொண்டு, மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளதையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே அமலில் உள்ள நிலையில், மும்மொழிக் கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.