புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் எழுப்பிய கேள்விக்கு, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024––-2005 கல்வியாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந் தோருக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாகக் கூறியது குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த (ஒன்றிய அரசு அளித்த நிதி )பட்டியல்
எண் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் 2022-23 2023-24 2024-25
- அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 5651.44 5527.59 6052.36
- ஆந்திரப் பிரதேசம் 150359 128940.8 124010.57
- அருணாச்சல் பிரதேசம் 2529.47 47503.49 57585.11
- அசாம் 208086.2 181046.9 202677.34
- பீகார் 355459.5 424173.1 421781.44
- சண்டிகர் 1079.21 11636.31 11858.37
- சத்தீஸ்கர் 828007 7659.06 83065.84
- தாத்ரா & நகர் ஹவேலி, தமன் & தியு 6466.66 4130.25 5462.65
- டெல்லி 22198.92 14608.83 38539.03
- கோவா 2985.77 1875.43 1633.61
- குஜராத் 132125 113253.2 124554.05
- ஹரியானா 67021.33 57880.24 53643.94
- ஹிமாச்சல் பிரதேசம் 55160.13 48596.96 52619.99
- ஜம்மு & காஷ்மீர் 36497.18 86543.88 82349.31
- ஜார்க்கண்ட் 115451.6 110493.3 107444.41
- கர்நாடகா 86152.48 82808.79 86830.33
- கேரளா 17815.99 14165.74 0
- லடாக் 1489.36 5222.63 13999.8
- லக்ஷத்தீவு 432.99 100.05 306.1
- மகாராஷ்டிரா 193928.9 298151.1 343471.12
- மத்தியப் பிரதேசம் 9000 100119.1 112624.52
- மணிப்பூர் 40475.7 25721.89 46559.15
- மேகாலயா 37515.29 39418.22 36282.56
- மிசோரம் 14268.09 27414.06 21651.76
- நாகாலாந்து 28104.49 23125.34 21140.5
- ஒடிசா 183667.4 123660.7 167239.29
- புதுச்சேரி 1527.52 1247.37 1246.03
- பஞ்சாப் 60504.93 33111.65 67813.14
- ராஜஸ்தான் 213861.1 320289.5 309065.25
- சிக்கிம் 10718.96 13260.51 12273.95
- தமிழ்நாடு 210723.3 187615.5 0
- தெலங்கானா 114251 92012.79 98878.94
- திரிபுரா 28672.54 34132.9 42002.98
- உத்தரப் பிரதேசம் 381975.3 427645.1 626479.22
- உத்தராகண்ட் 70438.94 44056.91 64678.27
- மேற்கு வங்கம் 152204.2 31129.41 0
மொத்தம் 3215194.42 3238279 3445821
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அனைத்து விவகாரங்களுக்கும் அரசு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சமக்ர சிக்ஷா திட்ட நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய எழுத்துப்பூர்வக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு தரப்பில் பதில்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி, திமுக மக்களவை உறுப்பினர் கணபதிராஜ்குமார், பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு மட்டும் 2024–-2025 கல்வியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமக்ர ஷிக்ஷா திட்டம் (Samagra Shiksha Scheme) என்பது இந்திய அரசால் கல்வியை மேம்படுத்துவதற்காக 2018-2019ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த திட்டமாகும். இது முன்பு காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இயங்கி வந்த சர்வ ஷிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் ஷிக்ஷா அபியான் மற்றும் ஆசிரியர் கல்விக்கான திட்டம் (Teacher Education) ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளையும் (முன்பள்ளி முதல் 12-ஆம் வகுப்பு வரை) உள்ளடக்கி, கல்வியின் தரம், அணுகல் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.