சமூக அறிவியல் ஊற்று – 13- அறிய வேண்டிய தந்தை பெரியார்

viduthalai
7 Min Read

ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் – 2

எந்தக் காரணத்தாலோ இந்து மத தர்மத்தை அனுஷ்டித்துத் தீர வேண்டியதல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடியும் நமது ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும். ஜாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஏதோ ‘பொல்லாத விதி வசத்தினால்’ இன்று ராமராஜியத்தைக் கோரும் திரு. காந்தியாரும், வருணாசிரமத்தைக் கோரும் தேசியத் தலைவர்களும் கேட்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்குப்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப்பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு, தாழ்வு வித்தியாசம் ஒருக் காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கொடுமைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒரு நாளும் அந்நியர் ஆட்சிக்கோ.
அடிமைத் தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது.

இன்றைய தினம் தேசியவாதிகளாய் இருக்கின்றவர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடைய வேண்டுமென்கிற உண்மையான ஆசையுடையவர்களாய் இருப்பார்களேயானால் அவர்கள் வெள்ளைக்கார ஆட்சி இருக்கும் போதே ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியதுதான் அறிவுள்ள வேலையாகும். அதைவிட்டு விட்டு ‘முதலில் நீ போய் விடு; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொன்னால் அது, ‘தான் சாவதற்குத் தானே மருந்து குடித்தது’ போல் தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000-க்கு 999 பேருக்குக் குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொருவரும் மேல் ஜாதி ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதும், தனக்குக் கீழ் பல ஜாதிகள் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவதுமான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள் இந்த நிலையில் இன்றைய தினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரம கொள்கையும், ஜாதி ஆதிக்கம் அதிகம் உடையவர்களான மக்களிடம் ஆட்சியும், பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதிக் கொடுமைகளும் அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக் கூடும் என்பதை யோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.

இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கொடுமைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒரு நாளும் அந்நியர் ஆட்சிக்கோ, அடிமைத் தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது.

குறிப்பு: குடிஅரசு இதழில் 30.11.1930 இதழில் வெளிவந்த தலையங்கம். 1950இல் விடுதலையில் 6.9.1950 அன்று மறுபதிப்பு செய்யப்பட்டிருந்தது.

“ஜாதி அடியோடு ஆதாரங்களோடு
ஒழிய வேண்டும்”

ஆச்சாரியார் அவர்கள் பார்ப்பனர்களின் சமுதாய சீர்திருத்தம் எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக்கிவிட்டார்.

ஆச்சாரியர் இந்த 30,40 வருட காலமாக ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக நடித்த நாடக வேஷத்தை நீக்கி, உண்மையான இராககோபாலச்சாரித் தன்மை என்ன என்பதைத் தெளிவாக்கி விட்டார்.

இதிலிருந்து ஆச்சாரியார் சீர்திருத்தவாதியா? அல்லது சனாதன வருணாசிரம் தருமவாதியா? என்பதைப் பொதுமக்கள் உணரத் தக்கது.

நாள் 25. 30 ஆண்டு காலமாக “இந்தியாவிலேயே இந்த 3,000 ஆண்டுகளுக்குள் ஜாதி ஒழிய வேண்டுமென்று சொன்னவர்கள் புத்தரும், வள்ளுவரும் அல்லாமல் வேறு ஒருவரும் இல்லை” யென்றும், “மூன்றாவதாகச் சொல்ல வேண்டுமானால் நான்தான் என்றும், ஸ்தாபனரீதியில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும்தான்” என்றும் சொல்லி வந்திருக்கிறேன். பொது மக்களை ஏமாற்றுவதற்காகவும், வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தவிதமான ஒரு சிறு கேடும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அநேக தலைவர்களும், சீர்திருத்தவாதிகளும், காந்தியார் உட்பட எல்லா மகான்கள் என்பவர்களும் “தீண்டாமை ஒழிய வேண்டும், தீண்டாமை சாஸ்திரத்தில், மதத்தில் இல்லை” என்று சொல்லி வந்திருக்கிறார்களே தவிர, ‘ஜாதி பிரிவு, முறை ஒழியவேண்டும்’ என்று யாருமே சொல்லவில்லை.

பண்டிதர் நேரு ஏதோ ஓரளவிற்குச் சொல்கிறார் என்றால். அதுவும் பெரிய ராஜதந்திரம் (பித்தலாட்டம்) என்றுதான் கருதுகிறேன். பண்டித நேரு எதற்காக ஜாதிப் பேச்சைப் பேசுகிறார் என்பதை அறிவோடு, அரசியல் கண்ணோடு பார்த்தால் யாருக்கும் எளிதில் விளங்கிவிடும். பண்டித ஜவஹர்லால் நேரு இந்திய அரசின் பிரதமர் என்பது மாத்திரமல்ல. உலகிலேயே ஒரு சர்வதேச பிரபல உருவமாக இருக்க ஆசைப்படுபவர். அப்படிப்பட்ட அவர் இந்திய எல்லையை விட்டு வெளியே கால் வைத்தால் ஒரு சாதாரண மூன்றாந்தர நாலாந்தர மனிதன் கூட பண்டிதநேருவைப் பார்த்து, “என்ன பண்டிதரே. உலகில் எவ்வளவோ புரட்சிகரமான மாறுதல்கள் எல்லாம் நடந்திருக்க நீவிர் பிரதமராக இருக்கும் உம்முடைய இராஜ்யத்திலே ‘பிராமணன்’ இருக்கிறானாம். ‘சூத்திரன்’ இருக்கிறானாம், பறையன் (சண்டாளன்) இருக்கிறானாம் பார்ப்பான் அக்கிரகாரத்தில் குடி இருக்கிறானாம். பறையன் குப்பை மேட்டில், சேரியில் குடி இருக்கிறானாம். கூலி, அடிமைகளாம். பார்ப்பான் (பிராமணன்) உடல் உழைப்பு இல்லாத சுகவாசியாம். இவற்றுக்கெல்லாம் காரணம் பிறவி ஜாதிப் பிரிவுதானாம். இது நிஜமா? இப்படியும் ஒரு நாடு இந்த 1956 இல் இருக்கிறதும், அதற்கு நீங்கள் பிரதமராக இருப்பதும் வாஸ்தவம்தானா?” என்று கேட்கப் படும் கேள்விகளுக்கு ஏராளமாகப் பொய் சொல்வது போல், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.” என்று மறைத்து வந்து, இப்போது வெளிநாட்டவர்களே இங்கு வந்து பார்த்து உண்மை காணும்படியான ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதால், ஜாதி ஒழிந்தாலும் சரி ஒழியாவிட்டாலும் சரி, பிறர் காதுகளுக்கு எட்டும்படியான அளவிற்கு “பண்டித ஜவஹர்லால் நேரு. ஜாதி ஒழிக்கப் பாடுபடுகிறார்” என்று தெரிந்தால் போதும் என்பதாகப் பண்டிதரும் அங்கொரு தடவை இங்கொரு தடவை ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்கிறார் என்பதைத் தவிர வேறில்லை.

பண்டிதரைப் பின்பற்றி அறிஞர் காமராசரும் ‘ஜாதி ஒழிய வேண்டும்” என்று சொல்கிறார் என்றால், அது பண்டித நேருவுக்குப் பின்தாளம் போடுகிற அறிகுறியேயாகும். அவர் காங்கிரசில் இருக்க வேண்டுமென்று விரும்பினாலோ. மந்திரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலோ ஒரு நாளும் ஜாதி ஒழிப்பைக் காரியத்தில் செய்ய அவரால் முடியாது. கம்யூனிஸ்ட்களினாலும் செய்ய முடியவில்லை. திராவிடர் கழகப் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைக்கும் கண்ணீர்த் துளிகளாலும் செய்ய முடியவில்லை. சரியான அளவுக்கு, அதனை வாயினாலும் சொல்ல முடியவில்லை என்றால், இனி வேறு யாரால் முடியப் போகிறது? அன்றியும் காங்கிரசில் ஜாதி ஒழிப்புத் திட்டம் இல்லவும் இல்லை. காமராசர் தன் பலம் அறியாமல், ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசினதன் பலன், இப்பொழுதும் சூத்திரன், கீழ்மகன் என்கின்ற பட்டியலில் இருக்கின்ற சில சகமந்திரிகளே இதனால் அவருக்குப் பார்ப்பனரிடம் ஏற்பட்ட பலவீனத்தைக் கொண்டு அவரை ஒழிக்க முன்வந்து விட்டார்கள் என்றால், பார்ப்பனர்கள் இவரை மிஞ்சவிடுவார்களா? தமிழர்களுக்குத் தாங்கள் எந்த ஜாதிப் பட்டியலில் இருந்தாலும் மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும், உத்யோகம்,பர்மிட், லைசென்ஸ் பணம் சேர்க்கிறவர்கள் ஆக இருந்தால் போதும் என்ற அளவில் இருக்கும்போது, ஜாதி ஒழிப்பிற்கு வேறு யார் எங்கிருந்து வர முடியும்?ஆனதனாலேயே ஆச்சாரியார் இந்த அருமையான தமிழர்களைப் பார்த்தும், அவர்களில் பலரைத் தனது காலடியில் வைத்துக் கொண்டிருப்பதை நினைந்தும், ஓங்கி ஒரேயடியாய், ஜாதி முறை ஒழியக்கூடாது – ஜாதி முறை ஒழியக்கூடாது ஜாதி முறை ஒழியக்கூடாது என்று முழங்கி விட்டார் – மும்முறை.

மற்றும், அதனாலேதான் ஆச்சாரியார் அவர்கள் இராமாயணம், பாரதம், கீதை. உபநிஷத்துகள்தான் நமது படிப்பினை. ஆதாரம் என்றும், இராமன், கிருஷ்ணன் முதலியவர்கள்தான் நமது கடவுள்கள் என்றும் பேசிவருகிறார். பிரசாரம் செய்கிறார். பத்திரிகைகளுக்குக் கட்டுரையும் எழுதுகிறார். புத்தகங்களும் எழுதி வருகிறார். அவற்றுக்குத் தாராளமான பத்திரிகை விளம்பரங்கள் பெறுகிறார். அவற்றை ரேடியோ,(வானொலி) மூலமும் ஒலிபரப்பி வருகிறார். நண்பர் ஆச்சாரியார் அவர்கள் மதுரை தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஏராளமான தமிழ் மக்களிடையே விழாவின் திறப்பாளராக இருந்து, ஜாதி ஒழியக் கூடாது என்பதாக அவர் பேசியிருக்கும் பேச்சை தினமணியில் உள்ளபடி அப்படியே தருகிறேன்.

– ‘தினமணி’, 3.5.1956

ஜாதிபேதங்கள் ஒழியவேண்டும். ஆனால் (அடிப்படை) ஜாதிகள் ஒழியக் கூடாது என்ற தலைப்பில் காணுவதாவது:

”ஜாதி வேற்றுமைகளை (பேதங்களை) ஒழிக்க வேண்டுமே தவிர. ஜாதிகளை (ஜாதிப் பாகுபாடுகளை, இப்போது இருக்கிற ஜாதி முறைகளை) ஒழிக்கக்கூடாது. இதை எல்லோருக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், இன்னும் சிறிது காலம்தான் நான் உயிரோடு இருப்பேன். எனக்குப் பிறகு இவைகளைச் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்” என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தோழர்களே! ஜாதிப் பாகுபாடு, ஜாதி முறை, ஜாதிப் பிரிவு, அதாவது பார்ப்பனர். சூத்திரர். பஞ்சமர் என்கிற பிரிவு. பிரிவு ஏற்பாடு, பிரிவுக்கு அவசியமான ஆதாரம், நடைமுறைகள், ஆகியவை ஒழிக்கப்படவில்லையானால் தமிழ் மக்களுக்கு. (பார்ப்பனரல்லாதவர்களுக்கு) இன்று இருந்து வரும் இழிநிலையும் குறைபாடும், முன்னேற்றத் தடைகளும் எப்படி மாறுதல் அடைய முடியும்? தமிழர்கள் (பார்ப்பனரல்லாத வர்கள் தங்கள் நாட்டிலே வாழ்வில் சம சந்தர்ப்பம் எப்படி அடையமுடியும்? ஆகையினால்தான் ஜாதி ஒழிப்பு வேலையை 30 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு இருக்கிறேன். ஆச்சாரியார் சொல்லியிருக்கிறபடி ஜாதி ஒழியக்கூடாது என்பதற்கு ஆச்சாரியார் ஒருவர் மாத்திரமல்ல; ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள். ஆனால், “ஜாதி அடியோடு ஆதாரங்களோடு ஒழியவேண்டும்’ என்று சொல்வதற்கு என்னைத் தவிர-திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யாருமே. எந்த ஸ்தாபனமுமே இல்லை. அதனால்தான் ஜாதிக் கடவுள்களை ஒழியுங்கள். ஜாதி ஆதாரங்களை ஒழியுங்கள். ஜாதிக் காப்பாளர்களை ஒழியுங்கள்” என்று சொல்லுகிறேன். இது என்னைத் தவிர, எங்களைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் அரசியலில் சம்பந்தப்பட்டோர் இதைச் சொன்னால் கண்டிப்பாக வெற்றி பெறமாட்டார்கள்.

இதிலிருந்தே நான் ஏன் இராமனுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து கொளுத்தச் சொல்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை) ‘விடுதலை, 4.6.1956

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *